டிராவிஸ் ஹெட் ருத்ர தாண்டவம் - 25 பந்தில் 80 ரன்...!
5 புரட்டாசி 2024 வியாழன் 10:06 | பார்வைகள் : 1127
ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
எடின்பர்க் மைதானத்தில் அவுஸ்திரேலியா மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நடந்தது.
நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா பந்துவீச்சை தெரிவு செய்ய, ஸ்கொட்லாந்து அணி முதலில் துடுப்பாடியது.
முன்சே அதிரடியாக 16 பந்துகளில் 28 ஓட்டங்களும், மேத்யூ கிராஸ் 21 பந்துகளில் 27 ஓட்டங்களும் விளாசினர்.
அணித்தலைவர் பெர்ரிங்டன் 23 (20) ஓட்டங்களும், மார்க் வாட் 16 ஓட்டங்களும் எடுக்க, ஸ்கொட்லாந்து 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்கள் எடுத்தது. சியான் அப்போட் 3 விக்கெட்டுகளும், பார்ட்லெட் மற்றும் ஜம்பா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில் ஜாக் பிரேசர் மெக்கர்க் டக்அவுட் ஆகி வெளியேறினார். ஆனால், டிராவிஸ் ஹெட் ருத்ர தாண்டவம் ஆடினார்.
அவருடன் அணித்தலைவர் மிட்செல் மார்ஷும் இணைந்து அதிரடியில் மிரட்டினார். இதன்மூலம் அவுஸ்திரேலிய அணி பவர்பிளேயில் 113 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்தது. இதற்கு முன்பே தென் ஆப்பிரிக்க அணி 2023யில் 102 ஓட்டங்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.
மார்ஷ் 12 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 39 ஓட்டங்கள் எடுத்து வெளியேற, டிராவிஸ் ஹெட் அதிரடியாக அரைசதம் விளாசினார். பின்னர் வந்த ஜோஷ் இங்கிலீஸும் மிரட்ட, அவுஸ்திரேலிய அணி 9.4 ஓவரில் 156 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஹெட் 25 பந்துகளில் 5 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 80 ஓட்டங்கள் குவித்தார்.
முன்னதாக அவர் 73 (22) ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, பவர்பிளேயில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். மேலும், 17 பந்துகளில் அரைசதம் விளாசி அதிவேகமாக 50 ஓட்டங்களை எட்டிய ஸ்டோய்னிஸ் சாதனையையும் சமன் செய்தார்.