வெளிநாடு செல்வதற்காக காத்திருந்த இலங்கை இளைஞனுக்கு நேர்ந்த கதி
5 ஆவணி 2024 திங்கள் 16:44 | பார்வைகள் : 1863
மகிழ்ச்சியைக் கொண்டாட சமனலவெவ வாவி அருகிற்கு சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கொரிய நாட்டிற்கு செல்வதற்கு பாடநெறியினை மேற்கொண்டு பரீட்சையில் சித்தியடைந்த 8 இளைஞர்களை கொண்ட குழுவொன்று தமது ஆசிரியருடன் நேற்று பம்பஹின்ன சமனலவெவ வாவியின் வான் கதவிற்கு அருகில் சென்று பரீட்சையில் சித்தியடைந்த மகிழ்ச்சியை கொண்டாடியுள்ளனர்.
கஹவத்த,வெலிகேபொல, பின்னவல,கொடகேவல பிரதேசத்தில் வசிக்கும் 8 இளைஞர்கள் நேற்று தமது ஆசிரியருடன் குறித்த பகுதிக்கு சென்றுள்ளனர்.
வென்னப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞனே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
அங்கு சென்றிருந்த ஒன்பது பேரில் மூன்று பேர் அந்த இடத்தில் முதல் முறையாக நீராடச் சென்றதாகவும், மற்றைய நபர்கள் நீராட செல்லவில்லை எனவும் விசாரணையில் தெரியவந்தது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக சமனலவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
நிராடச் சென்ற மூவரில் ஒருவர் நீரில் மூழ்கியதை அடுத்து ஏனைய இருவரும் அவரை மீட்க முயற்சி செய்துள்ளார்கள். அவர்களின் முயற்சி பயனடைய வில்லை. அப்போது குறித்த வீதியினுடாக பயணித்த ஏனைய இருவரின் உதவியுடன் நீரில் மூழ்கிய இளைஞனை மீட்டெடுத்து பம்பஹின்ன பிரதேச வைத்திய சாலையில் அனுமதித்துள்ள நிலையில், பின்னர் பலாங்கொடை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞன் இரத்தினபுரி, கொடகேவல பிரதேசத்தில் உள்ள தனது சித்தப்பாவின் வீட்டில் தங்கியிருந்து கொரிய நாட்டிற்கு செல்வதற்காக கஹவத்த பிரதேசத்தில் இருந்து பாடநெறியை பயின்று வந்துள்ளார்.
சுமார் மூன்று மாதங்கள் பாடநெறியை பயின்று வந்த நிலையில், நடைபெற்ற பரீட்சையில் தேர்ச்சி பெற்று கொரிய நாட்டிற்கு செல்ல தகுதி பெற்ற 8 இளைஞர்கள் தான் குறித்த பகுதிக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.