Paristamil Navigation Paristamil advert login

வங்கதேச விவகாரத்தில் பாக்.,கிற்கு தொடர்பா? ராகுல் கேள்வி: விசாரிப்பதாக ஜெய்சங்கர் பதில்

வங்கதேச விவகாரத்தில் பாக்.,கிற்கு தொடர்பா? ராகுல் கேள்வி: விசாரிப்பதாக ஜெய்சங்கர் பதில்

6 ஆவணி 2024 செவ்வாய் 13:39 | பார்வைகள் : 735


வங்கதேச விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளதா என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கேள்வி எழுப்பினார். அக்கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்தார்.

வங்கதேச விவகாரம் தொடர்பாக டில்லியில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது.ஜெய்சங்கர் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ராகுல் பேசியதாவது: வங்கதேசத்தில் நடந்த வன்முறை சம்பவங்களின் பின்னணியில் வெளிநாட்டு சதி குறிப்பாக பாகிஸ்தானின் பங்கு ஏதும் உள்ளதா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து ஜெய்சங்கர் கூறியதாவது: வங்கதேச சூழ்நிலையை பிரதிபலிக்கும் வகையில், பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வந்துள்ளார். எனவே பாகிஸ்தான் பங்கு குறித்த கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. வங்கதேச நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில், வங்கதேசத்தில் ஏற்பட்ட கலவரம், எப்படி தோன்றியது என்பது குறித்து விளக்கமளித்ததுடன், தற்போதைய நிலவரம் மற்றும் ஷேக் ஹசீனா இந்தியாவிற்கு எப்படி தப்பி வந்தார் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வங்கதேச விவகாரத்தில் மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சிகள் உறுதி அளித்து உள்ளன.

ஹசீனாவுக்கு நேரம் வழங்க வேண்டும்

இக்கூட்டத்தில் ஜெய்சங்கர் பேசுகையில், வங்கதேச விவகாரத்தில் உரிய நேரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கப்படும். டில்லியில் உள்ள ஷேக் ஹசீனாவுக்கு போதிய நேரம் வழங்க வேண்டும். அவரின் எதிர்கால திட்டத்தை அறிந்து கொள்ள விரும்புகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

ராஜ்யசபாவில் விளக்கம்

ராஜ்யசபாவில் ஜெய்சங்கர் பேசியதாவது: வங்கதேசத்தில் நிலைமை மோசம் அடைந்ததால், ஷேக் ஹசீனா இந்தியா வர தற்காலிக அனுமதி கோரினார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க அனுமதி வழங்கப்பட்டது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அவர் இந்தியா வந்துள்ளார். அவர் பதவி விலக வேண்டும் என்ற ஒரே கோரிக்கையுடன் அங்கு போராட்டம் நடந்தது.

டாக்காவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குவிந்ததால், பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பிறகே அவர், பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை எடுத்தார். மிக குறுகிய நேரத்தில் இந்தியா வர அனுமதி கோரினார். வங்கதேச அதிகாரிகளிடம் இருந்தும் விமான அனுமதிக்கான கோரிக்கை வந்தது.

தூதரகம் மூலமாக வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம். அங்கு 19 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. அவர்களில் 9 ஆயிரம் பேர் இந்தியா திரும்பிவிட்டனர். அங்குள்ள சிறுபான்மையினர் நிலை குறித்தும் கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்