சவுக்கு சங்கர் மீது 17 வழக்கு: போலீஸ் பதிலளிக்க உத்தரவு

9 ஆவணி 2024 வெள்ளி 03:14 | பார்வைகள் : 3955
சவுக்கு சங்கருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட, 17 வழக்குகளும், ஒரே சம்பவத்துக்கானதா என்பது குறித்து விளக்கம் அளிக்க, போலீஸ் தரப்புக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் போலீசாரை அவதுாறாக பேசியதாக, 'யு டியூபர்' சவுக்கு சங்கருக்கு எதிராக அளித்த புகாரில், கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.
அதைத் தொடர்ந்து, சென்னை, நீலகிரி, திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட, 16 போலீஸ் நிலையங்களில், சங்கருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த 17 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றத்தில் சங்கர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன், விசாரணைக்கு வந்தது. சில வழக்குகளில் ஜாமின் பெற்றுள்ளதாகவும், கைது செய்யப்படாத வழக்குகளில் கைது செய்யக்கூடாது என உத்தரவிடும்படியும், சங்கர் தரப்பில் கோரப்பட்டது.
போலீஸ் தரப்பில், 'சங்கருக்கு எதிராக பதிவான அனைத்து வழக்குகளும் ஒரே சம்பவம் தொடர்புடையதா என்பதை சரிபார்க்க வேண்டும்; அதற்கு அவகாசம் வழங்க வேண்டும்' என கூறப்பட்டது.
இதையடுத்து, அனைத்து வழக்குகளும், ஒரே சம்பவத்துக்காக பதிவு செய்யப்பட்டதா என்பதற்கு விளக்கம் அளிக்கும்படி, போலீஸ் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை, மூன்று வாரங்களுக்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.