Paristamil Navigation Paristamil advert login

ஓய்வூதியரா, கார் பந்தயமா எது முக்கியம்: அண்ணாமலை கேள்வி

ஓய்வூதியரா, கார் பந்தயமா எது முக்கியம்: அண்ணாமலை கேள்வி

10 ஆவணி 2024 சனி 04:11 | பார்வைகள் : 1317


போக்குவரத்து கழகங்களில் ஓய்வுபெற்றவர்களின் ஓய்வூதியத்தை முறைப்படுத்தி, அகவிலைப்படி உயர்வு, ஓய்வுகால பண பயன்களை, தமிழக அரசு உடனே வழங்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து, ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு, 102 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு வழங்காமல், அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. 18 மாதங்களாக ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வு கால பண பலனையும் வழங்காமல் இருப்பதாக தெரிகிறது.

கடந்த எட்டு ஆண்டுகளில் அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்கள், 93,000 பேர் உள்ளனர். இவர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாததுடன், ஓய்வூதியம் முறைப்படுத்தவில்லை.

பல முறை அரசிடம் கோரிக்கை விடுத்தும் 2022 செப்., மாதம் உயர் நீதிமன்றமே அகவிலைப்படி உயர்வு வழங்கக்கூறி தீர்ப்பளித்த பின்பும், தி.மு.க., அரசு வழங்கவில்லை. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

ஓய்வூதியதாரர்கள், பலமுறை அரசின் கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

அரசு துறைகளில் பல ஆண்டுகள் சேவை செய்து ஓய்வுபெற்றவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நிதி ஒதுக்காமல், கார் பந்தயம் போன்ற அனாவசிய செலவுகளுக்கு, அரசு அதிக நிதி ஒதுக்கி கொண்டிருக்கிறது.

பொதுமக்களின் வரி பணம், அவர்களுக்கான சேவைகளுக்கே தவிர, தி.மு.க.,வினரின் கேளிக்கைக்கு அல்ல. உடனே, அரசு போக்குவரத்து கழகங்களில் ஓய்வுபெற்றவர்களின் ஓய்வூதியத்தை முறைப்படுத்தி அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடு, ஓய்வுகால பண பயன்கள் ஆகியவற்றை உடனே நிறைவேற்ற வேண்டும்.

பொங்கல் பண்டிகை வரை இழுத்து, மீண்டும் வழக்கம் போல் போராட்டத்தில் ஈடுபடும் சூழலுக்கு ஊழியர்களை தள்ள வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்