தமிழ்ப் புதல்வன் திட்டம் சிறப்பானது - வானதி சீனிவாசன் பேட்டி
10 ஆவணி 2024 சனி 04:13 | பார்வைகள் : 1312
அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்குவதற்கான தமிழ்ப் புதல்வன் திட்டம், மாநில அளவில் நேற்று தொடங்கப்பட்டது. இதற்கான தொடக்க விழா கோவையில் உள்ள அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடந்தது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு இந்த திட்டத்தை தொடங்கி வைத்து, அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1,000 வழங்கினார்.
இந்த தமிழ்ப் புதல்வன் திட்ட தொடக்க விழாவில் கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். விழா மேடையில் அவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சிறிது நேரம் பேசினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன் கூறியதாவது:-
தமிழ்ப் புதல்வன் திட்ட தொடக்க விழாவில் பங்கேற்றதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னிடம் நன்றி கூறினார். தமிழ்ப் புதல்வன் திட்டம் மிகவும் நல்ல திட்டம். இந்த பணத்தை மாணவர்கள் போதை பழக்கத்திற்கு பயன்படுத்தாமல் இருந்தால் சிறப்பான திட்டம்தான். எனது தொகுதி சார்ந்த உள்கட்டமைப்பு பிரச்சினைகள் மற்றும் விமான நிலையம் விரிவாக்கம் தொடர்பாக பேசுவதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அதற்கு அவர் வந்து பாருங்கள் என்று சொன்னார்.
வருகிற 18-ம் தேதி மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவம்பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இதில் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என்று என்னிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். அதற்கு நான் கட்சியில் சொல்கிறேன் என்று தெரிவித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.