Paristamil Navigation Paristamil advert login

நாளை (11/08) ஒலிம்பிக் நிறைவு விழா எப்படி? எங்கே? எவ்வாறு ?கசிந்தது சில தகவல்கள்.

நாளை (11/08) ஒலிம்பிக் நிறைவு விழா எப்படி? எங்கே? எவ்வாறு ?கசிந்தது சில தகவல்கள்.

10 ஆவணி 2024 சனி 06:53 | பார்வைகள் : 2150


'Paris 24' மற்றும் 'France 24' அல்லது 'JO24' எனும் பெயர்களில் அழைக்கப்படும் 2024 ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுக்கள் கடந்த ஜூலை 26ம் திகதி செய்ன் நதி நீரின் மேலே மிதந்தும், நீந்தியும். கூரைகளில் தாவியும், பறந்தும். தரையில் நடந்தும் ஓடியும். உலகக் கண்களை கவர்ந்தும், பின்னர் விமர்சனங்களை சுமந்தும் நடந்துகொண்டிருக்கிறது. இந்த ஒலிம்பிக் போட்டிகள் அனைத்தும் நாளை (11/08) நிறைவுகாணவுள்ளது.

இந்த நிலையில் நிறைவு விழா எப்படி இருக்கும், எங்கே நடக்கும் எனும் சில தகவல்கள் தற்போது கசிந்துள்ளது. அதன்படி நிறைவு நிகழ்வுகள் செய்ன் நதி நீரின் மேலே திறந்த வெளியில் நடக்காது. மாறாக பாரிஸின் புறநகரில் Seine-Saint-Denis இல் 28 ஜனவரி 1998 திறந்த வைக்கப்பட்ட பிரான்சின் மிகப் பெரிய உதைபந்தாட்ட அரங்கமாகிய Stade de France இல் நடைபெற ஏற்பாடாகியுள்ளது என தெரியவந்துள்ளது. நிறைவு விழாவின் கால அளவு ஞாயிறு இரவு ஒன்பது மணி முதல் பதினொரு மணி வரை - இரண்டு மணி நேரங்களுக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறைவு விழாவை நேரில் காணும் நுழைவுச்சீட்டு 250 ஈரோக்கள் முதல் 1,600 ஈரோக்கள் வரை விற்பனையாகியுள்ளது. ஆரம்ப விழாவின் அரங்க ஆற்றுகைகளை வடிவமைத்து பாராட்டுக்களுக்கும், பெரும் விமர்சனங்களுக்கும் உள்ளான பிரான்ஸின் பிரபல நாடக அரங்கவியல் கலைஞர்  Thomas Jolly அவர்களும் அவரது குழுவினருமே நிறைவு விழாவையும் மீண்டும் காட்சிப்படுத்தவுள்ளனர். 'Records'எனும்  தலைப்பில் 40 நிமிடங்களுக்கு அரங்கக் கலை நிகழ்வு தயாரிக்கப்பட்டுள்ளது, அதில் "எதிர்கால உலகில் இருந்து ஒலிம்பிக் போட்டிகள் மறைந்து போகின்றன. அதன் பின்னர் என்ன நடக்கிறது? இன்னிசை நடன நாடக நிகழ்வில் அதற்கு பதில் கிடைக்கிறது. மற்றொரு புதிய Pierre de Coubertin மீண்டும் ஒலிம்பிக்கைத் தேடிக் கண்டுபிடிக்கிறார்" இதனைக் கற்பனையான கருப் பொருளாகக் கொண்டு ஆற்றுகை நிகழ்வு  நடைபெறும் எனும் தகவல் வெளியாகியுள்ளது.

நிறைவாக 2028 ஒலிம்பிக் போட்டிகள் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளதால் நாளைய நிறைவு நிகழ்வில் அமெரிக்க நடிகரும் தயாரிப்பாளருமாகிய Tom Cruise பங்குபற்றவுள்ளார் அவர்தான் 
 2028 ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிடம் ஒலிம்பிக் கொடியைக் கையளிக்கின்ற வைபவத்தில் கலந்து கொள்கிறார் எனவும் தகவல் கசிந்துள்ளது. நிறைவு விழா நடைபெறுகின்ற Stade de France அரங்கின் கூரையில் இருந்து ஒலிம்பிக் கொடியை பெற்றுக் கொண்டு அவர் லொஸ் ஏஞ்சல்ஸுக்குப் பறக்கின்ற விதமாக அவரது சாகச நிகழ்வு ஒன்றும் இடம்பெறும் எனவும் தெரியவருகிறது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்