Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்க முடியுமா?  2023 ஆம் ஆண்டு 2000 இள வயது கர்ப்பங்கள் பதிவு…!

இலங்கையில் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்க முடியுமா?  2023 ஆம் ஆண்டு 2000 இள வயது கர்ப்பங்கள் பதிவு…!

10 ஆவணி 2024 சனி 13:57 | பார்வைகள் : 604


இலங்கையில் கருக்கலைப்பு என்பது சட்டவிரோதமானதாகும். மேலும் அது தண்டனைக்குரிய குற்றமாகவும் உள்ளது.   மருத்துவ ரீதியாக நோக்கும் போது தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சந்தர்ப்பத்தில் தகுந்த காரணங்களுடன் கருக்கலைப்பு சத்திர சிகிச்சைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் இளவயது கர்ப்பங்கள் தொடர்பாக நாட்டில் எழுந்துள்ள சிக்கல்களுக்கு தீர்வுகள் காணப்படவில்லை. 

நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளில் சமூக குற்றங்கள் பெருகி வருவதை அரசாங்கம் கண்டு கொள்ளாமல் உள்ளமை கவலை தரக்கூடியதாக உள்ளது. கடந்த வருடம் மாத்திரம் இரண்டாயிரத்துக்கும் அதிகமான இளவயது கர்ப்பங்கள் பற்றிய முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. 

இள வயது கர்ப்பங்களை  மனிதாபிமான முறையில் நோக்க வேண்டும் என்றும் குழந்தை பேற்றுக்குரிய உடல் தகுதியை பெறாத பதின்மபருவ சிறுமிகளை  இந்த சட்டத்துக்குள் கொண்டு வருவதன் மூலம் அவர்களின் எதிர்கலாமே பாதிக்கப்படுகின்றது என்றும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

நியாயமானதும்  மனிதாபிமான அடிப்படையிலும்  மற்றும் அறிவியல்  தேவைகளின் அடிப்படையில் கருக்கலைப்பு அனுமதிக்கப்பட வேண்டுமென கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ரொஹான் பி.ருவன்புர தெரிவித்துள்ளார். 

இதற்கு அவர் முன் வைக்கும் காரணங்கள்  இள வயது கர்ப்பங்களாகும். வயிற்று நோவு காரணமாக கராப்பிட்டிய வைத்தியசாலையில் 12 வயது சிறுமி ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்தியர்கள் பரிசோதனைகளை மேற்கொண்ட போது அவர் மூன்று மாத கர்ப்பிணி என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. இது குறித்து விசாரணைகளை மேற்கொண்ட போது 51 வயதுடைய அயலவர் ஒருவரால் அந்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. 

இந்த சிறுமியின் குழந்தையை யார் பொறுப்பேற்பது? அல்லது அந்த சிறுமி குழந்தை ஒன்றை பிரசவிக்கும் உடல் நிலையில் இருக்கின்றாரா என்பதை எப்படி நாம் தீர்மானிப்பது என கேள்வியெழுப்புகின்றார் வைத்தியர் ருவன்புர. 

“பாலியல் துஷ்பிரயோகத்தால்  பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்கள், தங்கள் கைக்குழந்தைகளை வீதியோரத்தில் விட்டு விடுகிறார்கள் அல்லது  விற்பனை செய்கின்றனர். சிலர் பாரதூரமான  முடிவை எடுத்து சிசுவை கொலை செய்கின்றனர்.    இது இலங்கையில் ஒரு வெளிப்படையான சமூகப் பிரச்சினை. இந்தக் கண்ணோட்டத்தில் 2022 ஆம் ஆண்டு முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில்  கூறியபடி கருக்கலைப்பு தொடர்பான சட்டம் திருத்தப்பட வேண்டும்.

தற்போது கருக்கலைப்பு என்பது தாயின் உயிரைக் காப்பாற்ற மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. சட்டங்களை  திருத்துவது மதக் கோட்பாடுகள் மற்றும் பிற சித்தாந்தங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இருப்பினும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள்  சட்டங்களை  விட மிகவும் மேம்பட்டது. பிரான்ஸ் அரசியலமைப்பில் இணைக்கப்பட்ட சட்டத்தின் மூலம் கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  

சட்டங்களை தடை செய்தால் மாத்திரமே அது  சட்டவிரோத கருக்கலைப்புக்கு வழிவகுக்கும். இங்கு மற்றுமொரு  அநியாயம் இடம்பெறுகின்றது. தகாத செயற்பாடுகளாலும் பாலியல் துஷ்பிரயோகங்களாலும் கர்ப்பம் ஏற்படும் சிறுமிகள் கருக்கலைப்பு செய்வதற்காக சட்டவிரோத கருக்கலைப்பை மேற்கொள்ளும் நபர்களை நாடும் போது இதை வெளியே பகிரங்கப்படுத்தமாலிருப்பதற்கு தொடர்ச்சியாக அந்த நபர்களினால் அவர்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுகின்றனர். மீண்டும் மீண்டும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுகின்றனர். இது ஒரு அபாயகரமான நிலைமைகளாகும் என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.  

எனினும் இலங்கையில் இந்த இளவயது கர்ப்பங்களும் சந்தர்ப்பவசத்தால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகி கர்ப்பமாகும் பெண்களின் நிலைமைகள் குறித்து பார்க்க வேண்டியுள்ளது. சில பெண்கள் இதன் காரணமாக  உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.  

இலங்கை தண்டனைச் சட்டத்தின் பிரிவு 303 இன் படி  'கருச்சிதைவை ஏற்படுத்துவது' தண்டனைக்குரிய   குற்றமாகும், அபராதம் அல்லது  மூன்று முதல் பத்து ஆண்டுகள் வரை இக்குற்றத்துக்கு சிறைத்தண்டனை  விதிக்கப்படும். மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் (HRW) கருத்துப்படி, தெற்காசியாவில் கருக்கலைப்புச் சட்டங்கள்  உள்ள மற்றுமொரு நாடு ஆப்கானிஸ்தான் ஆகும்.  

2022 ஆம் ஆண்டு நீதி அமைச்சராக இருந்த அலி சப்ரி, சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில்  கருக்கலைப்பை அனுமதிப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் மாத்திரமின்றி தேசிய அளவிலான  விவாதங்கள் நடத்தப்படல் வேண்டும் என தெரிவித்திருந்தார். இதை பாராளுமன்றத்திலுள்ள பெண் உறுப்பினர்கள் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். எனினும் அச்சந்தர்ப்பத்தில் சில மத அமைப்புகளால் அதற்கு எதிர்ப்புகள் தோன்றியிருந்தன. 

பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் வேறு காரணங்களால் ஒரு பெண் தனக்கு சம்மதமில்லாத கர்ப்பத்தை சுமக்கும் போதும் ஒரு பெண்ணின் உயிரை காப்பாற்றுவதற்கான அவசியம் எழும் போதும் கருக்கலைப்பை அனுமதிப்பது தேவையாக உள்ளது என அச்சந்தர்ப்பத்தில் நீதி அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியிருந்தார். ஆனால் அது குறித்து தேசிய மட்டத்தில் விவாதங்கள் எழாத காரணங்களினால் அக்கோரிக்கை வலுவிழந்து போனது. எனினும் தற்போது இளவயது கர்ப்பங்களின் அதிகரிப்பால் கருக்கலைப்பை மருத்துவ ரீதியாக சட்டபூர்வமாக்குவது குறித்து வைத்தியர்களும்  அது குறித்து பேசி வருகின்றனர். 

கருக்கலைப்பு தண்டனைக்குரிய குற்றமாக காணப்பட்டாலும் அது எமது நாட்டில் தினந்தோறும் எங்காவது ஒரு இடத்தில் இடம்பெற்றே வருகின்றது என்பதையும் மறுக்க முடியாது. இதன் காரணமாக சிறுமிகள் மற்றும் பெண்களின் உடல் ஆரோக்கியம் பாதிப்படையும் அதே வேளை உயிராபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே கருக்கலைப்பை நியாயமான காரணங்களுடன் சட்டபூர்வமாக்கும் முயற்சிகள் அவசியம் என வைத்தியர்களும் பெண்ணியவாதிகளும் கோரிக்கை முன்வைத்து வருகின்றனர். 

நன்றி Virakesari

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்