கருணாநிதி நுாற்றாண்டு நினைவு ஆக.,18ல் 100 ரூபாய் நாணயம் வெளியீடு
13 ஆவணி 2024 செவ்வாய் 03:25 | பார்வைகள் : 1016
முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா, வரும் 18ம் தேதி சென்னையில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க, அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வரும், தி.மு.க., தலைவருமான கருணாநிதி நுாற்றாண்டு பிறந்த நாள் விழாவையொட்டி, கருணாநிதி நுாற்றாண்டு நினைவு நாணயமாக, கருணாநிதி உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியிட, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
நாணயம் வெளியீட்டு விழா, வரும் 18ம் தேதி மாலை 6:50 மணிக்கு, சென்னை கலைவாணர் அரங்கில் நடக்க உள்ளது. விழாவிற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், நாணயத்தை வெளியிட உள்ளார்.
விழாவில் பங்கேற்க, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உட்பட, அனைத்து கட்சி தலைவர்களுக்கும், திரையுலக பிரமுகர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.
கருணாநிதி நுாற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயத்தின் ஒரு புறம், இந்திய அரசின் சின்னம், மறுபுறம் கருணாநிதி படம் இடம் பெற்றுள்ளது. கருணாநிதி படத்தின் கீழ், 'தமிழ் வெல்லும்' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. 'கலைஞர் கருணாநிதி நுாற்றாண்டு 1924 - 2024' என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.