Paristamil Navigation Paristamil advert login

53 ஆயிரம் கோடி இழந்த முதலீட்டாளர்கள் தவிப்பு!

53 ஆயிரம் கோடி இழந்த முதலீட்டாளர்கள் தவிப்பு!

13 ஆவணி 2024 செவ்வாய் 03:29 | பார்வைகள் : 567


இந்திய பங்குச் சந்தைகளை நிர்வகிக்கும் அமைப்பான 'செபி'யின் தலைவர் முறைகேடு செய்ததாக வெளியான செய்தியால், பங்குச் சந்தையில் நேற்று களேபரம் நிகழ்ந்தது. முதலீட்டாளர்கள் வர்த்தகத்தின் இடையே 53,000 கோடி ரூபாயை இழந்தனர்.

சர்வதேச நிறுவனங்களின் நிதி நிர்வாகம் குறித்து புலனாய்வு செய்து அறிக்கை வெளியிடுகிறது ஓர் அமெரிக்க நிறுவனம். ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்பது அதன் பெயர். கடந்த ஆண்டில் 'அதானி' குழுமம் குறித்து ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால், அதானி பங்குகள் பல்லாயிரம் கோடிகளுக்கு மேலான பங்கு மதிப்பை இழந்தது.

அந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட் வரை சென்று, ஹிண்டன்பர்க் எழுப்பிய கேள்விகள் குறித்து விசாரணை நடத்தும்படி செபிக்கு கோர்ட் உத்தரவிட்டது.


அவகாசம் நீட்டிப்பு


கடந்த ஆண்டு மார்ச் மாதம் அந்த உத்தரவை பிறப்பித்த சுப்ரீம் கோர்ட், இரண்டு மாதங்களில் விசாரணையை முடிக்க கெடு கொடுத்திருந்தது. செபி கேட்டுக் கொண்டதன்படி, அதன் பின் அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

நாற்பதுக்கும் மேற்பட்ட புகார்களில் ஒன்று மட்டுமே பாக்கி இருப்பதாகவும், அது முடிந்ததும் விசாரணை அறிக்கை தாக்கல் செய்வதாகவும் சமீபத்தில் கோர்ட்டில் செபி தெரிவித்தது.

இந்த நிலையில் தான், ஹிண்டன்பர்க் இப்போது அடுத்த குண்டை வீசியுள்ளது. 'கடந்த ஆண்டில் நாங்கள் சுட்டிக் காட்டிய அதானி குழும முறைகேடுகளில், எந்தெந்த வெளிநாட்டு போலி கம்பெனிகள் வழியாக மோசடி நடந்தது என சுட்டிக் காட்டினோமோ, அத்தகைய கம்பெனிகள் சிலவற்றில் செபியின் தலைவரே சம்பந்தப்பட்டுள்ளார்.

'அவற்றில் கணிசமான பங்குகளும் வைத்துள்ளார். எனவே, அவரைக் கொண்டே புகார்களை விசாரிக்க ஏற்பாடு செய்தால் உண்மைகள் எப்படி வெளியே வரும்?' என ஹிண்டன்பர்க் கேட்டுஉள்ளது.

எந்த அமைப்பின் பாதுகாப்பை நம்பி மக்கள் முதலீடு செய்கின்றனரோ, அந்த அமைப்பின் தலைவர் மீதே பெரிய குற்றச்சாட்டு வைக்கப்பட்டதால், ஒட்டுமொத்த பங்குச் சந்தையும் அதிர்ச்சி அடைந்தது.

அதானி குழுமத்தின் பங்குகளை வைத்திருந்தவர்கள் அவற்றை குறைந்த விலைக்கு விற்க ஆரம்பித்தனர். தனிநபர்கள் கைகழுவியது அதிகமா, நிறுவனங்கள் தள்ளிவிட்டது அதிகமா என்ற கணக்கு உடனே தெரியவில்லை. ஆனால், சந்தை தடதடத்தது.


மாலையில் மீண்டது


நேற்றைய வர்த்தகம் துவங்கி சிறிது நேரத்தில், அதானி குழுமத்தின் பங்குகள் 7 சதவீதம் அளவுக்கு சரிந்தன. அக்குழுமத்தின் 10 நிறுவனங்கள், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

அவை அனைத்தும் சரிவை சந்தித்தன. பிற நிறுவனங்களின் பங்குகளும் சரிவை சந்தித்ததால், முதலீட்டாளர்களுக்கு 53,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.

இருப்பினும், மாலையில் வர்த்தக நேரம் முடிந்தபோது, சந்தை பெருமளவு மீண்டது. அதானி குழுமத்தின் எட்டு நிறுவனங்கள் மீளவில்லை. 'அதானி கிரீன் எனர்ஜி, அம்புஜா சிமென்ட்ஸ்' ஆகிய இரு நிறுவன பங்குகள் மட்டும், இழப்பில்இருந்து மீண்டு, சற்றுஏற்றத்துடன் நிறைவடைந்தன.

பங்குச் சந்தைகளை கட்டுப்படுத்தும் உயரிய அமைப்பான செபியின் தலைமை அதிகாரி மீதே குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், சந்தை மீதான மக்களின் நம்பிக்கை சேதமாகும்; எனவே, அரசு உடனடியாக தலையிட்டு உரிய விசாரணை நடத்தி, மக்களின் நம்பிக்கையை மீட்க வேண்டும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர். அதற்காக பார்லிமென்டின் இரு சபைகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் அடங்கிய விசாரணை குழுவை அமைக்குமாறு மத்திய அரசை காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

மத்திய அரசு இதற்கு நேரடி பதில் சொல்லவில்லை. பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களும், முன்னாள் அமைச்சர்களும் பங்குச்சந்தை சரிவுக்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என பகிரங்கமாக கூறுகின்றனர். இந்தியா வேகமாக முன்னேறுவதை பொறுக்க முடியாமல் வெளிநாடுகள் செய்யும் சதிக்கு ராகுல் துணை போவதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

செபியின் தலைமை பொறுப்பை வகிப்பவர் மாதவி பூரி புச் என்பவர். அவர் ஹிண்டன்பர்க் அறிக்கையில் தனக்கு எதிராக கூறப்பட்ட புகார்களை மறுத்து ஓர் அறிக்கை வெளியிட்டார். ஆனால், அவரது மறுப்பு அறிக்கையே தாங்கள் எழுப்பிய சந்தேகங்களை ஊர்ஜிதம் செய்துவிட்டதாக ஹிண்டன்பர்க் மீண்டும் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மாதவியின் கணவர், அதானி குழுமத்தின் ஆலோசகர் நிர்வகிக்கும் நிறுவனத்தில் பெரும் தொகை முதலீடு செய்திருப்பதை அதில் சுட்டிக் காட்டுகிறது. மேலும், செபியில் பதவி ஏற்குமுன் தான் நடத்திவந்த சிங்கப்பூர் நிறுவனத்தை கைவிட்டு விட்டதாக மாதவி சொல்லியிருப்பது உண்மையல்ல என்று கூறி, அதற்கான ஆவணத்தையும் ஹிண்டன்பர்க் வெளியிட்டுள்ளது.

எனவே, தவறான தகவல்களை சுப்ரீம் கோர்ட்டில் செபி சமர்ப்பித்து இருப்பதாக காங்கிரஸ் சந்தேகிக்கிறது. இதனால், மாதவி உடனே பதவி விலக வேண்டும்; அதானியையும், மாதவியையும் காப்பாற்றும் முயற்சியை அரசு கைவிட்டு, பார்லிமென் டின் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதை ஏற்க மறுத்தால் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என அக்கட்சியின் தலைவர் வேணுகோபால் தெரிவித்தார்.

ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் கூறினார்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்