மியான்மரில் ட்ரோன் தாக்குதல் - சிறார்கள் உட்பட 200 பேர்கள் பலி
13 ஆவணி 2024 செவ்வாய் 08:31 | பார்வைகள் : 1546
மியான்மரில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற ரோஹிங்கியா மக்கள் மீது ட்ரோன் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதில் சிறார்கள் உட்பட பல டசின் மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரக்கைன் மாகாணத்தின் மவுங்டாவ் நகரில் ஏற்பட்டுள்ள வன்முறையில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் நாஃப் ஆற்றைக் கடந்து பங்களாதேஷிற்குள் நுழைய முயன்ற நிலையிலேயே தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்களன்று நடந்த இச்சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் தற்போது காணொளிகள் வெளியாகியுள்ளன. பல்வேறு கிராம மக்கள் வன்முறைக்கு அஞ்சி எல்லை கடக்க முயன்ற நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் 5 மணியளவில் தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.
குறைந்தது 200 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் சுமார் 300 பேர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
ஆனால் சடலங்களை கைப்பற்ற எவரும் முன்வரவில்லை என்றும், உயிருக்கு அஞ்சி அனைவரும் தப்பியதாகவே கூறப்படுகிறது. மியான்மரில் தற்போதுள்ள ராணுவ ஆட்சியை அகற்ற போராடும் ஆயுதக் குழுக்களில் ஒன்றான Arakan ராணுவம் சமீப மாதங்களில் ரக்கைன் மாகாணத்தின் பெரும் பகுதியை கைப்பற்றியுள்ளது.
ஆனால் திங்களன்று நடந்த தாக்குதலுக்கு மியான்மர் ராணுவமும் Arakan ராணுவமும் ஒருவருக்கொருவர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த நிலையில், சமூக ஆர்வலர்கள் தரப்பு, இது Arakan ராணுவம் முன்னெடுத்த தாக்குதல் என்றே கூறுகின்றனர்.
பல மாதங்களாக இக்குழுவினர் ரோஹிங்கியா மக்களை கொலை செய்வதுடன், கிராமங்களுக்கு தீவைப்பதும் இளைஞர்களை வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்வதன் மூலம் குறிவைத்தும் வந்துள்ளனர்.
மட்டுமின்றி, பொதுமக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் தொடர்பில் இக்குழுவினர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். மேலும், 2016 மற்றும் 2017ல் ரோஹிங்கியா மக்கள் மீதான மிக மோசமான தாக்குதலை அடுத்து இன அழிப்பு வழக்குகளையும் இவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
ஆனால் தற்போதைய தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்றே Arakan ராணுவம் மறுத்து வருகிறது.