கட்டுநாயக்க விமான நிலையத்தில் நெருக்கடி நிலை
13 ஆவணி 2024 செவ்வாய் 10:02 | பார்வைகள் : 1157
இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் ஏனையவர்களுக்கும் நிகழ்நிலை விசா வழங்கப்படாமை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் வருகைக்கான விசாவைப் பெறுவதற்கு நீண்ட வரிசைகள் உருவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, இலங்கைக்குள் நுழைவதற்கான விசா வழங்குவதில் இருந்து VFS Global நிறுவனத்தை நீக்கி, பழைய முறைப்படி விமான நிலையத்தில் விசா வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எனினும், அரசாங்கமும் குடிவரவு திணைக்களமும் பழைய முறைப்படி நிகழ்நிலை விசா வழங்குவதை ஆரம்பிக்காததால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா பெற நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளன.
இந்த நிலையில், இலங்கைக்கு வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒன் அரைவல் விசாவைப் பெறுவதே ஒரே தீர்வாக மாறியுள்ளது.
இலங்கையில் ஒகஸ்ட் மாதம் முதல் சுற்றுலாப் பருவம் ஆரம்பமாகியுள்ள நிலையில், கண்டி எசல பெரஹெரா திருவிழாவைக் காண ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வருகின்றனர்.