ஒரு தலித் முதல்வராகவே முடியாது..!: அடித்து சொல்கிறார் திருமா
14 ஆவணி 2024 புதன் 08:33 | பார்வைகள் : 949
எந்த சூழலிலும், எந்த காலத்திலும் ஒரு தலித், ஒரு மாநிலத்தின் முதல்வராக முடியாது'' என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.
உள்ஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று அக்கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது: உத்தர பிரதேசத்தில் முன்பு மாயாவதி முதல்வராக இருந்தார். அதன்பிறகு, இந்தியாவில் எந்த சூழலிலும், எந்த காலத்திலும் ஒரு தலித், ஒரு மாநிலத்தின் முதல்வராக முடியாது. இதை விவாதித்தால், ஏன் பார்லிமென்டுடன் இந்த அதிகாரம் இணைக்கப்பட்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்.
நமக்கு திமுக அரசு மீது நம்பிக்கை இருப்பது சரி. ஆனால் திமுக அரசு என்பது நிலையானது அல்ல; மாநில அரசு தான் நிலையானது. கட்சிகள் வரும் போகும்; அது வேறு. சமூக நீதி மீது நம்பிக்கையுள்ளவர்கள் வருவார்கள், போவார்கள்; அது வேறு. மாநில அரசுகளில் எந்த சூழலிலும் ஒரு தலித்தை முதல்வராக ஏற்றுக்கொள்ளும் நிலை இங்கே இல்லை, வர முடியாது.
இந்தியாவிலேயே பட்டியலின சமூகத்தினரில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் பஞ்சாப். அங்கு எஸ்.சி., எஸ்.டி., மட்டும் 32 சதவீதம் பேர் உள்ளனர். அவ்வளவு பேர் கொண்ட சமூகம், தனித்த அரசியல் சக்தியாக எழுச்சிப்பெற்றால், அவர்கள் தான் நிரந்தர முதல்வராக இருக்க முடியும்.
ஒவ்வொரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்போதும் எஸ்.சி., எஸ்.டி., கணக்கெடுப்பும் சேர்த்தே நடத்தப்படுகிறது. நாங்கள் (விசிக) இப்போது சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவிப்பது ஓபிசி பிரிவினருக்காக தான். இதிலிருந்து விசிக, ஓபிசி.,க்கு ஆதரவானவர்களா இல்லையா என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.