பரிஸ் : மகிழுந்து மோதி ஒருவர் பலி - காவல்துறையினரிடம் இருந்து தப்பி ஓடிய சாரதி விபத்தை ஏற்படுத்தினார்
3 புரட்டாசி 2023 ஞாயிறு 16:07 | பார்வைகள் : 8701
காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி தப்பி ஓடிய சாரதி ஒருவர் ஏற்படுத்திய விபத்தில் பாதசாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை Pantin (Seine-Saint-Denis) நகரின் Edouard Vaillant பகுதியில் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், அதிகாலை 3.30 மணி அளவில், வீதியில் அதிவேகமாக பயணித்த சந்தேகத்துக்கு இடமான மகிழுந்து ஒன்றை தடுத்து நிறுத்தினர். ஆனால், குறித்த மகிழுந்து காவல்துறையினரிடம் இருந்து தப்பித்து பரிசை நோக்கி விரைந்துள்ளது.
காவல்துறையினர் குறித்த மகிழுந்தை துரத்திச் சென்றனர்.
பரிஸ் 19 ஆம் வட்டாரத்தின் Porte de la Villette சுரங்கத்துக்குள் நுழைந்த மகிழுந்து, அங்கிருந்து வெளியேறி பயணித்த நிலையில், வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த பாதசாரி ஒருவரை மோதி தள்ளியது.
இச்சம்பவத்தில் 30 வயதுடைய பாதசாரி சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.
மகிழுந்து சாரதி ஆரம்பத்தில் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ள நிலையில், சிலமணி நேரம் கழித்து கைது செய்யப்பட்டுள்ளார்.