வானொலி நிகழ்ச்சி ஒன்றை நிறுத்த முயன்ற ஜனாதிபதி..!!
15 புரட்டாசி 2020 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 19829
ஒரு நாட்டின் ஜனாதிபதி ஒருவர், இன்னொரு நாட்டு ஜனாதிபதிக்கு போன் பண்ணி, வானொலி நிகழ்ச்சி ஒன்றை நிறுத்தும்படி கோரிய சுவையான சம்பவம் ஒன்றை இன்று பார்க்கலாம்.
ஆபிரிக்காவில் Togo என்று ஒரு நாடு உள்ளது. அதன் முன்னாள் ஜனாதிபதி Gnassingbé Eyadéma, 2002 ஆம் ஆண்டு செப்டெம்பர் 17 ம் திகதி, எலிசே மாளிகைக்கு தொலைபேசி அழைப்பெடுத்து, அன்று RFI வானொலியில் ஒலிபரப்பாக இருந்த நிகழ்ச்சி ஒன்றை நிறுத்தும்படி கோரினார்.
இருண்டது விடிந்தது தெரியாத எலிசே மாளிகை என்ன செய்வது என்று யோசித்தது. என்ன நிகழ்ச்சி? அதை ஏன் அரசாங்கம் தலையிட்டு நிறுத்த வேண்டும்? வானொலி நிகழ்ச்சி ஒன்றில் மூக்கை நுழைக்கும் அளவுக்கு பிரெஞ்சு அரசு வேலை வெட்டி இல்லாமல் இருக்கிறதா?
பிறகு விசாரித்துப் பார்த்த போது சமாச்சாரம் வெளியே வந்தது. அதாவது Togo ஜனாதிபதி Gnassingbé Eyadéma மற்றும் அவரது அரசியல் எதிரியாகிய Agbéyomé Kodjo ஆகியோர் இணைந்து RFI வானொலிக்கு பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் எதுக்கு கொடுக்கப் போகிறார்கள்? RFI காரர்கள், அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி, அழைத்து வந்து உக்கார வைத்து வாயைக் கிளறி இருப்பார்கள். அதுதான் நடந்திருக்கும்.
ஒருவருக்கொருவர் ஆகாத இரண்டு பிரெஞ்சு அரசியல்வாதிகளை உக்கார வைத்து பேட்டி எடுத்தாலே அனல் தெறிக்கும். இதில் ஆபிரிக்காவில் போய், இருவரை உக்கார வைத்து பேட்டி எடுப்பது என்றால், சாதாரணவிடயமா என்ன?
RFI காரன் போட்ட தூண்டிலில் வசமாகச் சிக்கிய இரண்டு ஆபிரிக்க தலைவர்களும் கண்டதெல்லாம் உளறித் தள்ளி, பேட்டியை ரணகளமாக்கிவிட, அதில் RFI காரன் குஷியாகிய ‘பேசுங்கைய்யா.. நல்லா பேசுங்க.. எங்ககிட்ட நாலு மைக்கு இருக்கு’ என்று உசுப்பேத்திவிட, ‘உன்னைப் பற்றித் தெரியாதா நீ கொலைகாரன் தானே?’ என்று ஒருவர் சொல்ல, அடுத்தவரோ ‘ஆமா ஆமா ஜனாதிபதியாக இருந்துகொண்டு நீ ஜட்ஜ போட்டுத் தள்ளியது எனக்கு தெரியாதா?’ என்று அடுத்தவர் அடித்துவிட, சண்டையோ சண்டை செம சண்டை.
‘கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டமோ?’ என்று பிறகு பீல் பண்ணிய ஜனாதிபதி Gnassingbé Eyadéma, வானொலிக்காரர்களைக் கெஞ்சிப் பார்த்தார். ‘ஏதாவது பார்த்துக் கீத்து எடிட் பண்ணுங்கையா’ என்று கேட்டதுக்கு, RFI காரன் என்ன பதில் சொல்லியிருக்கிறான் ‘எடுத்த பேட்டியை எடிட் பண்ணும் வழக்கம் எங்கள் வானொலி வம்சத்துக்கே இல்லை’ என்று பேசி இருக்கிறான்.
இதனால் கடுப்பான ஜனாதிபதி எலிசேக்கு போன் பண்ணி, ‘உங்கள் நாட்டு ஊடக சுதந்திரத்தில் தீயை வைக்க’ என்று சத்தம் போட, எலிசே மாளிகை ‘எங்கள் நாட்டு ஊடகத்தைக் கண்டால் நமக்கே நடுங்கும்யா, பேசாமல் போனை வை’ என்று கறாராகச் சொல்லிவிட்டது.
எந்த எடிட்டிங்கும் இல்லாமல் பேட்டி ஒலிபரப்பானது. பெரிய பெரிய பூதங்கள் எல்லாம் வெளியே வந்தது.
அந்த சுவையான கதை இன்னொரு நாள்