பிரித்தானியாவில் சாண்ட்விச்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
21 புரட்டாசி 2024 சனி 09:04 | பார்வைகள் : 2113
ஐரோப்பிய நாடுகளில் கடுகுப்பொடி, வேர்க்கடலை ( mustard powder, peanut) போன்ற பொருட்களுக்கு ஒவ்வாமை (allergy) உள்ளவர்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
வேர்க்கடலை ஒவ்வாமை உடையவர்கள், கடுகு, கடுகுப்பொடி கலந்த உணவுகளைத் தவிர்க்குமாறு உணவுகள் தரக்கட்டுப்பாட்டு ஏஜன்சி அறிவுறுத்தியுள்ளது.
அவற்றில் வேர்க்கடலையும் கலந்திருக்கலாம் என்றும், அவற்றை உண்பவர்களுக்கு அவை உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் உணவுகள் தரக்கட்டுப்பாட்டு ஏஜன்சி தெரிவித்துள்ளது.
அவ்வகையில், கடுகுப்பொடி போன்ற பொருட்கள் உள்ள சாண்ட்விச்கள், சாலட்கள், சாஸ்கள் போன்றவற்றைத் தவிர்க்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இறக்குமதி செய்யப்பட்ட தயாரிப்பு ஒன்றில் இந்த கடுகு தொடர்புடைய பொருட்கள் இருக்கக்கூடும் என கருதப்படும் நிலையில், எந்த உணவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை துல்லியமாக கண்டறியும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உணவகங்களில் சாப்பிடுபவர்கள், உணவு ஆர்டர் செய்யும் முன் தாங்கள் உண்ணும் உணவில் கடுகு தொடர்பான பொருட்கள் உள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்ளுமாறும், ஒவ்வாமை உடையோர் அவற்றை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
இதற்கிடையில், இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனமான FGS Ingredients Ltd என்னும் நிறுவனம், கடுகு தொடர்பான பொருட்கள் உள்ள உணவுகளை அகற்றுமாறு தங்களிடம் உணவுப்பொருட்கள் வாங்கும் சில்லறை வர்த்தக நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளது.