Paristamil Navigation Paristamil advert login

அவுஸ்திரேலியாவில் 19 வயதின் கீழ் பெண்கள் மும்முனை ரி20 தொடர் : இலங்கைக்கு முதல்  வெற்றி

அவுஸ்திரேலியாவில் 19 வயதின் கீழ் பெண்கள் மும்முனை ரி20 தொடர் : இலங்கைக்கு முதல்  வெற்றி

21 புரட்டாசி 2024 சனி 09:09 | பார்வைகள் : 914


அவுஸ்திரேலியாவின் பிறிஸ்பேன், அலன் பெட்டிக்றூ ஓவல் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட பெண்கள் ரி20 மும்முனை கிரிக்கெட் போட்டியில் இலங்கை 69 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்த மும்முனைத் தொடரில் வரவேற்பு நாடான அவுஸ்திரேலியாவும் பங்குபற்றுகிறது.

ரஷ்மிக்கா செவ்வந்தியின் அதிரடி துடுப்பாட்டத்துடன் கூடிய சகலதுறை ஆட்டம் இலங்கையின் வெற்றியில் பிரதான பங்காற்றியது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த 19 வயதுக்குட்பட்ட இலங்கை பெண்கள் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்ப வீராங்கனை சஞ்சனா காவிந்தி திறமையாகத் துடுப்பெடுத்தாடி 30 ஓட்டங்களைப் பெற்றார்.

மத்திய வரிசையில் அணித் தலைவி மனுதி நாணயக்கார 19 ஓட்டங்களையும் சமுதி நிசன்சலா 16 ஓட்டங்களையும் தஹாமி சனெத்மா 13 ஓட்டங்களையும் பெற்றனர். (104 - 6 விக்.)

இதனைத் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஷ்மிக்கா செவ்வந்தி 19 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 36 ஓட்டங்களைக் குவித்து அணியைப் பலப்படுத்தினார்.

செவ்வந்தியும் ரஷ்மி நேத்ராஞ்சலியும் 7ஆவது விக்கெட்டில் 37 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இதில் நேத்ராஞ்சலியின் பங்களிப்பு வெறும் 3 ஓட்டங்களாகும்.

பந்துவீச்சில் அனிக்கா டொட் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட நியூஸிலாந்து பெண்கள் அணி 17.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 79 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஈவ் வொலண்ட் (24), அனிக்கா டொட் (12) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ப்ரமுதி மெத்சர 6 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரஷ்மிக்கா செவ்வந்தி 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அசேனி தலகுனே 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சமலி ப்ரபோதா 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இலங்கை தனது 2ஆவது போட்டியில் அவுஸ்திரேலியாவை இயன் ஹீலி ஓவல் மைதானத்தில் நாளை எதிர்த்தாடவுள்ளது.

தொடர்ந்து அவுஸ்திரேலியாவை மீண்டும் 25ஆம் திகதி சந்திக்கவுள்ள இலங்கை, கடைசிப் போட்டியில் நியூஸிலாந்தை 26ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது. இந்த இரண்டு போட்டிகளும் பில் பிப்பென் ஓவல் மைதாத்தில் நடைபெறவுள்ளன.

அதனைத் தொடர்ந்து 19 வயதுக்குட்பட்ட பெண்கள் ஒருநாள் தொடர் நடைபெறும்.

அலன் பெட்டிக்றூ ஓவல் மைதானத்தில் அவுஸ்திரேலியாவை 30ஆம் திகதியும் நியூஸிலாந்தை அக்டோபர் 1ஆம் திகதியும் இலங்கை எதிர்த்தாடவுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்