இலங்கையில் முழுமையான தேர்தல் முடிவுகள் வௌியாகும் வரை விசேட பாதுகாப்பு
21 புரட்டாசி 2024 சனி 15:44 | பார்வைகள் : 2064
ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவு வௌியாகும் வரையில் நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
63,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் கிடைத்த தகவல்களுக்கமைய வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகாமல் தேர்தல் மிக அமைதியாக நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
வாக்கெண்ணும் பணிகள், தேர்தல் முடிவுகள் வௌியாகும் வரை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.
குழுக்களாக இணைந்து எந்த செயற்பாடுகளிலும் ஈடுபட வேண்டாமெனவும் குழுக்களாக இணைந்து தேர்தல் முடிவுகளை பார்க்க வேண்டாமெனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
விசேட வீதித்தடைகளை ஏற்படுத்தி சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ குறிப்பிட்டார்.