ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக்கொலை
23 புரட்டாசி 2024 திங்கள் 03:31 | பார்வைகள் : 1235
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜுலை 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை சென்னையை மட்டும் அல்லாமல் தமிழகத்தையே உலுக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக செம்பியம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்
முதல் கட்டமாக, மறைந்த பிரபல ரவுடியான ஆற்காடு சுரேஷின் தம்பி ராணிப்பேட்டை மாவட்டம் பொன்னை பகுதியைச் சேர்ந்த பொன்னை பாலு (39), அவரது கூட்டாளிகள் குன்றத்தூரைச் சேர்ந்த திருவேங்கடம் (33) உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். சகோதரர் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக் கட்டியதாக பொன்னை பாலு வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இது ஒருபுறமிருக்க, கொலையின் பின்னணியில் இருந்ததாக, வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன் என தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., த.மா.கா. கட்சிகளைச் சேர்ந்தவர்கள், ரவுடிகள், வழக்கறிஞர்கள் என பல்வேறு தரப்பைச் சேர்ந்த மொத்தம் 27 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலையில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான ரவுடி புதூர் அப்பு டெல்லியில் நேற்று கைது செய்யப்பட்டார். இவர் ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல நாட்டு வெடிகுண்டுகளை ரவுடி அப்புக்கு சப்ளை செய்தவர் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான ரவுடி சீசிங் ராஜா ஆந்திராவில் நேற்று கைது செய்யப்பட்டார். அவரை சென்னை அழைத்து வந்த நிலையில், நீலாங்கரையில் வைத்து போலீசாரை தாக்கிவிட்டு சீசிங் ராஜா தப்ப முயன்றதாக சொல்லப்படுகிறது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் ரவுடி சீசிங் ராஜா சுட்டுக்கொல்லப்பட்டார்.