பிரான்சின் இரும்புப் பெண்மணி.. நேற்றைய தொடர்ச்சி.
30 ஆடி 2020 வியாழன் 10:30 | பார்வைகள் : 19222
புதிய இராணுவ அமைச்சரின் நியமனம் பலத்த கேள்விகளை உருவாக்கியது. அனைத்து ஊடகங்களும் ‘யார் இந்த Florence Parly என்று துருவித் துருவி ஆராய்ந்தன.
ஆனால் அமைச்சர் அதுபற்றி எல்லாம் கவலைப்படவே இல்லை. வந்ததும் வராததுமாக அவர் இட்ட கட்டளை என்ன தெரியுமா? அதுவரை தற்காலிகமாக இராணுவத்துக்கு பொறுப்பாக இருந்த ஒருவர் செய்த முறைகேட்டை ஆராயும்படி உத்தரவு பிறப்பித்து தனது அதிரடி ஆட்டத்தைத் துவக்கினார். அந்த முறைகேடு வழக்கு இன்னமும் நடந்துகொண்டு இருப்பதால், அதுகுறித்து எழுதுவும் இங்கு நாம் எழுதப் போவதில்லை.
ஈராக்கில் நிலைகொண்டிருக்கும் பிரெஞ்சு இராணுவத்தை மீள எடுக்கும்படி அமைச்சருக்கு அழுத்தம் வந்தது. ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார். அங்கே 160 பிரெஞ்சு இராணுவத்தினர் நடவடிக்கையில் உள்ளார்கள். அவர்களை மீள எடுக்க முடியாது என்றும் தீவிரவாதிகளை ஒழிக்கும்பணி இன்னமும் முடிந்துவிடவில்லை என்றும் ஒரே வார்த்தையில் பதில் தந்தார் இந்தப் பெண் அமைச்சர்.
ஈரானின் அணுக் கொள்கைகளுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை அறிவித்திருக்கும் அமைச்சர் அந்த நாட்டுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
துறைக்குப் புதியவராக இருந்தாலும் கட்டளைகளில் தெளிவாக இருப்பதால், இவரை அமைச்சராக தெரிவு செய்தது பற்றி யாரும் இப்போது பேசுவதில்லை. மாறாக அவரின் அடுத்த கட்டளை எதுவாக இருக்கும் என்பது குறித்துத்தான் பேசுகிறார்கள்.