மீல்மேக்கர் பிரியாணி
23 புரட்டாசி 2024 திங்கள் 15:44 | பார்வைகள் : 688
மட்டன் பிரியாணி சுவையில் மீல்மேக்கர் பிரியாணியை வீட்டிலேயே எளிதாக எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க…
தேவையான பொருட்கள் :
மீல்மேக்கர் - 1 கப்
பாஸ்மதி அரிசி - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
நெய் - 2 டேபிஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிஸ்பூன்
பிரிஞ்சி இலை - 2
சீரக தூள் - 1/4 டீஸ்பூன்
சோம்பு தூள் - 1/4 டீஸ்பூன்
கருப்பு மிளகு தூள் - 1/4 டீஸ்பூன்
கிராம்பு தூள் - 1/4 டீஸ்பூன்
பட்டை தூள் - 1/4 டீஸ்பூன்
புதினா - 1 கைப்பிடி
கொத்தமல்லி இலை - 1 கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குறைந்தது ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்.
பின்னர் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
தண்ணீர் கொதித்ததும் மீல்மேக்கர் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து ஊறவைத்து கொள்ளுங்கள்.
மீல்மேக்கர் நன்கு ஊறியதும் நார்மல் தண்ணீரில் போட்டு அலசி பிழிந்து எடுத்து தனியே வைக்கவும்.
தற்போது அடுப்பில் பிரஷர் குக்கர் ஒன்றை வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடாக்கிக்கொள்ளவும்.
பின்னர் அதில் பிரிஞ்சி இலை, நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் கீறிய பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து கலந்து வதக்கிக்கொள்ளுங்கள்.
இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போனவுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு மென்மையாக வதங்கியதும் நறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லி இலையை போட்டு கலந்து வதக்கவும்.
பின்னர் அதில் பட்டை தூள், சீரக தூள், சோம்பு தூள், மிளகு தூள்மற்றும் கிராம்பு தூள் ஆகியவற்றை சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
மசாலாக்களின் பச்சை வாசனை போனவுடன் அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
இவை நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் ஊறவைத்த பாஸ்மதி அரிசி, மீல்மேக்கர் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொதிக்கவிடவும்.
பின்னர் பிரஷர் குக்கரை மூடி 1 விசில் வரும் வரை விட்டு அடுப்பை அணைக்கவும்.
குக்கரில் பிரஷர் தானாக அடங்கியதும் மூடியை திறந்து பார்த்தால் சுவையான மீல்மேக்கர் பிரியாணி சாப்பிட ரெடியாக இருக்கும்.