வாகனத்தில் சுற்றிப் பார்க்க ஓர் அழகிய மிருகக்காட்சிச்சாலை!
23 ஆடி 2020 வியாழன் 10:30 | பார்வைகள் : 19453
அது ஒரு அழகான மிருகக்காட்சிச்சாலை. ஓங்கி உயர்ந்த பெரும் மரங்களின் மத்தியில், 240 ஏக்கர் பெரும் நிலப்பரப்பில், இல் து பிரான்ஸ் மாகாணத்தில் அமைந்துள்ளது.
இது இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று வழமையான அமைப்பில் உள்ள மிருகக்காட்சிச்சாலை. பெரும் கூண்டுகளில் வகை வகையான விலங்குகளை நீங்கள் காணலாம். முக்கியமாக சிங்கங்கள் இருக்கும் இடத்தில் பெரும் கண்ணாடிக் குகை ஒன்றை செய்து வைத்துள்ளார்கள். அந்தக் குகைக்குள்ளால் சென்று சிங்கங்களை மிக மிக அருகில் நீங்கள் காணலாம். அதாவது கண்ணாடியின் ஒருபுறம் நீங்கள். மறுபுறம் சிங்கங்கள். பயப்பிடாதீர்கள். கண்ணாடி உடையாது.
குட்டிகளை தமது பைக்குள் வைத்துக்கொண்டு தாவித்திரியும் கங்காருக் கூட்டங்களை மிக மிக அருகில் சென்று பார்க்கலாம். இன்னும் பல விலங்குகள் பறவைகள் அங்கே உண்டு.
இதன் இன்னொரு பகுதி பிரத்தியேகமானது. அங்கு நீங்கள் உங்கள் காரில் பயணிக்கலாம். வளைந்து வளைந்து செல்லும் பிரத்தியேக பாதையில் மிகவும்
குறைந்த வேகத்தில் அமைதியாக வாகனத்தை ஓட்டிச் சென்றால், பல விலங்குகளும் பறவைகளும் உங்களைத் தேடி வரும். அருங்கில் வந்து கார் கண்ணாடியைத் தொட்டுப் பார்க்கும்.
மிகவும் இனிமையான அனுபவமாக இருக்கும் இந்த Safari எனப்படும் சவாரிப் பயணத்தில் கரடி, வரிக்குதிரை, வான்கோழி உள்ளிட்ட பல விலங்குகளைப் பார்க்கலாம்.
Zoo Safari de Thoiry எனும் பெயருடைய இந்த விலங்குக் காட்சிச்சாலை இல் து பிரான்ஸ் மாகாணத்தில் இருப்பதால், நாம் அனைவரும் இலகுவாக அங்கு செல்ல முடியும்.
உள்ளே செல்வதாயின் முகக்கவசம் அவசியம். தவறாமல் எடுத்துச் செல்லுங்கள்.