சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க லோக் ஆயுக்தாவுக்கு கோர்ட்டு உத்தரவு
25 புரட்டாசி 2024 புதன் 12:09 | பார்வைகள் : 1126
கர்நாடகத்தில் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம், மைசூருவில் கடந்த 2021-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சியின்போது, தற்போதைய முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது. அதற்கு ஈடாக பார்வதிக்கு 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதில் குறைந்த நில வழிகாட்டி உடைய இடத்திற்கு பதிலாக நிலவழிகாட்டி மதிப்பு அதிகமுள்ள பகுதியில் பார்வதி நிலத்தை பெற்றிருப்பதாக தகவல் வெளியானது.
இதில் முறைகேடு நடந்துள்ளதாக தற்போது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இது தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா மீது ஊழல் வழக்கு தொடர சமூக ஆர்வலர்கள் டி.ஜே.ஆபிரகாம், சினேகமயி கிருஷ்ணா, பிரதீப்குமார் ஆகியோர் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். அதனை பரிசீலித்த கவர்னர், கடந்த மாதம் (ஆகஸ்டு) 17-ந் தேதி சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி வழங்கி உத்தரவிட்டார். கவர்னரின் இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் கடந்த மாதம் 19-ந் தேதி சித்தராமையா மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் அந்த மனு மீது விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி நாகபிரசன்னா, சித்தராமையாவின் மனு நிராகரிக்கப்படுவதாகவும், கவர்னரின் உத்தரவு செல்லும் என்றும் பரபரப்பு உத்தரவிட்டார். கவர்னரின் உத்தரவுக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து முதல்-மந்திரி சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என்று கர்நாடக பா.ஜ.க. தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஆனால் இந்த விவகாரத்தில், 'நான் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்றும், என் மீதான வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வேன்' என்றும் முதல்-மந்திரி சித்தராமையா திட்டவட்டமாக கூறினார்.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த லோக் ஆயுக்தாவுக்கு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக மூன்று மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் லோக் ஆயுக்தாவுக்கு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சிறப்பு கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவு தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "என்னை விசாரிக்க லோக் ஆயுக்தாவுக்கு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். கோர்ட்டு உத்தரவின் முழு நகலையும் படித்துவிட்டு விரிவாக பதில் அளிக்கிறேன்.
விசாரணையை எதிர்கொள்ளவும், சட்டப்போராட்டம் நடத்தவும் தயாராக இருக்கிறேன். விசாரணைக்கு நான் அஞ்சப்போவதில்லை. எல்லாவற்றையும் எதிர்கொள்வதில் உறுதியாக இருக்கிறேன். சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பேன்." என்று தெரிவித்துள்ளார்.