Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் போதுமான எரிபொருள் கையிருப்பில் - ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையில் போதுமான எரிபொருள் கையிருப்பில் - ஜனாதிபதி அறிவிப்பு

26 புரட்டாசி 2024 வியாழன் 13:19 | பார்வைகள் : 1866


இலங்கையில் நுகர்வுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அறிவித்தனர்.

மக்களுக்குத் தடையின்றி எரிபொருளை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அடுத்த வருடத்திற்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். இந்த செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி என்ற வகையில் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில்  வியாழக்கிழமை (26) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே   ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.

இந்திய உதவித்திட்டத்தின் கீழ் மின்சக்தி அமைச்சிற்குக்   கிடைத்துள்ள சூரிய சக்தி பெனல்களை விரைவில் பிரிவெனாக்களுக்கு  வழங்க ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரைவிடுத்த ஜனாதிபதி, சூரிய சக்தி பெனல்களை  வழங்குவதற்கான திட்டமொன்றைத் தயாரிப்பதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும்  வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் கடனுதவிகளின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் திட்டங்களைத் துரிதப்படுத்துவதன் அவசியத்தை தெளிவுபடுத்திய ஜனாதிபதி, வெளிநாட்டு உதவியின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்களுக்கு மூன்று மாதங்களுக்குள் ஒப்புதல் வழங்க ஒரு குழுவை நியமிக்க  எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் வெளிநாட்டு உதவியின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் திட்டங்களை விரைவுபடுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கிராமிய அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்தி கிராமத்திற்கு பணம் கிடைக்கும் வகையிலான முறைமையொன்றை  ஏற்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, இதன் ஊடாக  பொருளாதாரத்தை விரைவாக பலப்படுத்த முடியும் என்றும்  தெரிவித்தார். இந்தச் செயற்பாடுகளில் அதிகாரிகளுக்கு பெரும் பங்கு இருப்பதாகவும்அதற்கு அதிகாரிகளின் அர்ப்பணிப்பு மிகவும் அத்தியாவசியமானது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, வலுசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால உள்ளிட்ட அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்