ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த சிறுவன்.
30 ஆனி 2020 செவ்வாய் 13:30 | பார்வைகள் : 19762
2018ம் ஆண்டு ஜூலை மாதம் 24ம் திகதி செவ்வாய்க்கிழமை. பிரித்தானியாவின் டோவர் துறைமுகத்தில் அந்த 16 வயது சிறுவன் நம்பிக்கையோடும் தைரியத்தோடும் நின்றுகொண்டு இருந்தான்.
சற்று நேரத்தில் அவன் கடலிலே குதித்து நீந்தி, ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரான்சுக்குச் செல்லப் போகிறான். இதற்கு முன்னர் பலர் இந்த கால்வாயை நீந்திக் கடந்தாலும் 16 வயதுச் சிறுவன் ஒருவன் நீந்த முனைந்தது பலரையும் ஆச்சரியத்தில் தள்ளியது.
சிறுவனுக்கு அனுமதி கொடுப்பதா? இல்லையா? என இரண்டு நாட்டு அரசுகளும் யோசித்தன. இருந்தாலும் அந்த பிரெஞ்சுச் சிறுவனின் மனோதிடம் அரசுகளை இணங்க வைத்தது.
சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயாராகின. இரண்டு நாட்டு கடல் கண்காணிப்பு அதிகாரிகளும் கூட்டாக நடவடிக்கையில் இறங்கினார்கள். எல்லாமே தயார்.
அதோ மின்னல் வேகத்தில் சிறுவன் கடலுக்குள் பாய்கிறான். கைகளையும் கால்களையும் நிதானமாக அசைத்து லாவகமாக நீந்திச் செல்கிறான்.
கடல் தண்ணீர் சில் என்று குளிர்கின்றது. காற்றும் வேகமாகவும் மெதுவாகவும் மாறி மாறி வீசுகின்றது. சிறுவனோ எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளவில்லை.
அவன் தன் இலக்கில் குறியாக இருந்தான். அவனுக்குத் தெரியும் அவனது அம்மா பிரெஞ்சுக் கரையிலே அவனது வருகைக்காக காத்திருப்பார். தன்னைக் கண்டதும் ஓடி வந்து கட்டியணைத்து முத்தம் தருவார்.
9 மணித்தியாலங்களும் 47 நிமிடங்களும் ஆகின. அதோ கைக்கெட்டும் தூரத்தில் பிரெஞ்சுக் கரை தெரிகிறது. முகத்தில் நிறைந்த பூரிப்புடன் அவனது அம்மா கரையிலே காத்திருக்கின்றார்.
சிறுவனின் கைகள் பிரெஞ்சுக் கரையைத் தொட்டன. அத்துடன் ‘ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த வயது குறைந்த பிரெஞ்சு நபர்’ எனும் வரலாறும் பதிவாகியது.
கரையிலே மக்களும் மீடியாக்களும் குவிந்து நின்றார்கள். சிறுவனின் கண்கள் அவனது அம்மாவைத் தேடின.
பரிசிலே தலைக்கு மேல் இருந்த அத்தனை வேலைகளையும் ஓரமாக வைத்துவிட்டு சாதனை மகனை வாழ்த்த வந்த அந்த தாயின் பெயர் ஆன் இதால்கோ.
ஆம். நீங்கள் நினைப்பது சரி. அவரே தான் - பரிஸ் நகரின் முதல்வர்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் மீண்டும் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆன் இதால்கோவின் மூன்றாவது மகன் Arthur Germain தான் அந்த சாதனைச் சிறுவன்.
இப்போது நாங்கள் என்ன செய்யலாம்?
அந்தச் சிறுவனையும் கூடவே அவனது அம்மாவையும் வாழ்த்தலாம்..!!!