அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியா 3வது பெரிய பொருளாதாரமாகும்: ரகுராம் ராஜன்
27 புரட்டாசி 2024 வெள்ளி 03:30 | பார்வைகள் : 1317
கடந்த 10 ஆண்டுகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளதாகவும், உள்நாட்டில் உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க கவனம் செலுத்த வேண்டும் என்றும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்ததாவது: 'மேக் இன் இந்தியா' போன்ற திட்டங்களின் நோக்கம் சிறப்பானது தான். இதனால், உட்கட்டமைப்பு போன்ற சில பிரிவுகளில் சிறப்பான முன்னேற்றங்களை அடைந்துள்ளோம். எனினும், இன்னும் பல துறைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டியுள்ளது. வணிகம் செய்யும் சூழலை இன்னும் எளிதாக்க வேண்டும்; அதற்கேற்ப அரசின் கொள்கை முடிவுகள் இருக்க வேண்டும்.
வருமான வரி உள்ளிட்ட அமைப்புகள், அச்சுறுத்தும் விதமாக செயல்படாது என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அரசின் கொள்கை மீது விமர்சனங்கள் எழும்போது, அவை அனைத்தையுமே இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க நினைக்கும் துஷ்ட சக்தி என நிராகரிப்பது சரியானதல்ல.
விமர்சனங்களை ஆராய்ந்து, ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ள முடியுமா என பார்ப்பதே, நாட்டின் வளர்ச்சிக்கு உதவும். தொடர்ந்து, 7 சதவீத வளர்ச்சி அடைந்து வந்தால், அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் ஜெர்மனி மற்றும் ஜப்பானை பின்னுக்கு தள்ளி, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கக் கூடும். இவ்வாறு தெரிவித்து உள்ளார்.