Paristamil Navigation Paristamil advert login

471 நாட்கள் சிறைவாசம் முடித்தார் செந்தில் பாலாஜி

471 நாட்கள் சிறைவாசம் முடித்தார் செந்தில் பாலாஜி

27 புரட்டாசி 2024 வெள்ளி 03:41 | பார்வைகள் : 249


முறைகேடு வழக்கில் கைதாகி, 471 நாட்களாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு, உச்ச நீதிமன்றம் நேற்று நிபந்தனை ஜாமின் வழங்கியது.

கடந்த 2011 -- -16 அ.தி.மு.க., ஆட்சியில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். போக்குவரத்து கழகங்களில் நடத்துனர், ஓட்டுனர் வேலை தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவர் மீது மூன்று வழக்குகளை பதிவு செய்தனர்.

குற்றப்பத்திரிகை

அதன் அடிப்படையில், அவர் மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்தது. கடந்த ஆண்டு ஜூன் 14ல், அவர் கைது செய்யப்பட்டார்.

ஆகஸ்ட் மாதம் 3,000 பக்க குற்ற பத்திரிகையை, அமலாக்கத்துறை தாக்கல் செய்தது. அவரது ஜாமின் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தன.

இதை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி முறையிட்டார். அதை விசாரித்த நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாஷி அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. அதன் விபரம்:

செந்தில் பாலாஜி, 15 மாதங்களாக சிறையில் இருக்கிறார். வழக்கு விசாரணை இப்போதைக்கு முடியும் என தெரியவில்லை. ஏனென்றால், 2,000 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது; 600 சாட்சிகள் உள்ளனர்.

இவர்களிடம் விசாரணை முடிக்க, மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் போதாது. அதுவரை அவரை சிறையில் வைத்திருப்பது, அரசியலமைப்பின், 21வது பிரிவின் கீழ், அவரது அடிப்படை உரிமையை மீறும் செயல்.

இரு நபர் உத்தரவாதம்

விசாரணையை முடிப்பதற்கும், ஜாமின் வழங்குவதற்கும் தொடர்பில்லை. மேலும், லஞ்சமாக பெற்ற 1.34 கோடி ரூபாய், செந்தில் பாலாஜியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாக நம்புவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. எனவே, செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்க உத்தரவிடுகிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவு நகலுடன், தலா 25 லட்சம் ரூபாய் சொத்து மதிப்பை கொண்ட இரு நபர் உத்தர வாதங்களை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன், செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர்கள் மா.கவுதமன், பரணிகுமார் தாக்கல் செய்தனர்.

நீதிபதி சில சந்தேகங்கள் உள்ளதாக கூறி, அமலாக்கத்துறையின் சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷை அழைத்து விளக்கம் கேட்டார். 'பிணை உத்தரவாதத்தை நீதிமன்றம் ஏற்பதில் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை' என்று ரமேஷ் தெரிவித்தார். அதை ஏற்று, செந்தில் பாலாஜியை விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார். அவருடைய உத்தரவு, 'இ- - மெயில்' வாயிலாக, புழல் சிறைக்கு அனுப்பப்பட்டது. அதையடுத்து, இரவு 7:00 மணிக்கு செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டார்.

சிறை வாசலில் தி.மு.க.,வினர் ஆடிப்பாடி அவரை வரவேற்றனர். ''அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, இந்த வழக்கு தொடரப்பட்டது. இதிலிருந்து மீண்டு வருவேன். என் மீது முதல்வர் வைத்துள்ள நம்பிக்கைக்கு வாழ்நாள் முழுதும் நன்றி சொல்வேன்,'' என செந்தில் பாலாஜி கூறினார்.

தி.மு.க.,வினர் வாகனங்களை ஜி.என்.டி., சாலையில் நிறுத்தியதால், புழல் சிறை முதல் மூலக்கடை வரை, ஐந்து கிலோ மீட்டருக்கு வாகனங்கள் நெரிசலில் சிக்கின.

நிபந்தனைகள் என்ன?

* ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பகல் 11:00 முதல் 12:00 மணிக்குள், சென்னையில் உள்ள அமலாக்கத்துறை இயக்குனரகத்தில் உள்ள துணை இயக்குனர் அலுவலகத்தில், செந்தில் பாலாஜி ஆஜராகி கையெழுத்திட வேண்டும்* ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை அன்று, விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும்* சாட்சிகளை கலைக்கவோ, அவர்களை சந்தித்து பேசவோ முயற்சித்தால், ஜாமின் ரத்து செய்யப்படும்* விசாரணை நீதிமன்றத்தில், இந்த வழக்கு தொடர்ந்து நடக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்* பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்* விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்தாலோ, அற்ப காரணங்களுக்காக ஒத்திவைக்க கோரினாலோ அல்லது வழக்கை விரைவாக முடிக்க இடையூறு ஏற்படுத்தினாலோ, ஜாமின் உத்தரவு ரத்து செய்யப்படும்.


சகோதரர் எங்கே?

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில், செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உட்பட, ஏழு பேர் மீது அமலாக்க துறை வழக்கு பதிவு செய்தது. அசோக்குமார் தலைமறைவானார். நான்கு முறை, 'சம்மன்' அனுப்பியும் அவர் வரவே இல்லை. தேடப்படும் குற்றவாளியாக, 'லுக் அவுட் நோட்டீஸ்' வெளியிடப்பட்டது. நேபாளத்தில் பதுங்கி இருப்பதாக தெரிந்து, அங்கேயும் தேடினர்; சிக்கவில்லை. 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்