பரிஸ் : காப்பீடு தொகைக்காக ‘போலி கொள்ளை’! - வர்த்தகர் கைது!
27 புரட்டாசி 2024 வெள்ளி 08:00 | பார்வைகள் : 3586
பரிசில் இரத்தினக்கல் விற்பனையில் ஈடுபடும் ஒருவர் போலியான ஒரு கொள்ளைச் சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார். அவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
பரிஸ் 1 ஆம் வட்டாரத்தில் இரத்தினக்கல் விற்பனையில் ஈடுபடும் ஒருவர், கடந்த செப்டம்பர் 14 ஆம் திகதி, அவரது கடையினை பூட்டிவிட்டு, பெறுமதியான சில வைரக் கற்களை எடுத்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அதன் போது அவரைச் சுற்றி வளைத்த கொள்ளையர்கள் இருவர், அவரைத் தாக்கி, அவர் கொண்டுசென்ற 1.185 மில்லியன் யூரோக்கள் பெறுதியுடைய இரத்தினக்கற்களை கொள்ளையிட்டுச் சென்றனர்.
பின்னர் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர், இக்கொள்ளைச் சம்பவத்தில் சந்தேகத்துக்கிடமான பல விடயங்கள் இருப்பதை உணர்ந்தனர். கடையின் கண்காணிப்பு கமரா பழுதடைந்து இருந்துள்ளது. கொள்ளை இடம்பெற்ற அன்றைய தினம் அவர் பாதுகாவலர்கள் எவரையும் அழைத்துச் செல்லவில்லை. அதுக்குரிய சரியான விளக்கம் தரப்படவில்லை போன்ற முரணான சம்பவங்கள் இடம்பெற, விசாரணைகளில் சில திடீர் திருப்பம் ஏற்பட்டது.
அதேவேளை, கொள்ளை இடம்பெற்றதாக சொல்லப்படும் இடத்தில் எந்த வித கண்காணிப்பு கமராக்களிலும் காட்சிகள் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி கொள்ளையினை, அக்கடையின் உரிமையாளரே இருவரை வைத்து மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. 29 வயதுடைய இரத்தினக்கல் விற்பனையாளர் உடனடியாக கைது செய்யப்பட்டு, விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
“காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து இழப்பீடு பெற இதுபோல் செயற்பட்டதாக’ தெரிவிக்கப்படுகிறது.