ஏ.டி.எம்., கொள்ளையர்களை சுட்டுபிடித்த தமிழக போலீஸ்; ஒருவர் பலி!
27 புரட்டாசி 2024 வெள்ளி 08:23 | பார்வைகள் : 1395
கேரளாவில் ஒரே இரவில் 3 ஏ.டி.எம்.,களில் கொள்ளை அடித்து விட்டு கன்டெய்னர் லாரியில் தப்பிச் சென்ற கொள்ளையர்களை, நாமக்கல் மாவட்ட போலீசார் துப்பாக்கி முனையில் சுட்டு பிடித்தனர். ஒருவர் உயிரிழந்தார்.
கேரள மாநிலம் திருச்சூரில் அடுத்தடுத்து 3 ஏ.டி.எம்., மையங்களில் நேற்று நள்ளிரவு கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. கேஸ் கட்டர் மூலம் கொள்ளை சம்பவத்தை நிகழ்த்திய மர்ம நபர்கள் கிட்டத்தட்ட 66 லட்சம் ரூபாய் பணத்துடன் தப்பிச் சென்றனர். மேலும் வேறு ஒரு பகுதியில் இருந்து ஏடிஎம் எந்திரம் ஒன்றையும் அலேக்காக கடத்திச் சென்றுள்ளனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ பகுதிக்குச் சென்று தடயங்களை சேகரித்து புலன் விசாரணையை துவக்கினர். முதல் கட்ட விசாரணையில் வெள்ளை நிற கார் ஒன்று இந்த சம்பவத்தின் போது சந்தேகத்துக்கு இடமான வகையில் சென்றதை உறுதிப்படுத்தினர்.
இதையடுத்து, தொடர் விசாரணையில் வடமாநில பதிவெண் கொண்ட கன்டெய்னர் லாரியில் பணம் மற்றும் வெள்ளை காருடன் கொள்ளை கும்பல் வழி எங்கும் விபத்துகளை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்று கொண்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக களத்தில் இறங்கிய போலீசார் தமிழக, கேரள எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் கன்டெய்னர் லாரி ஒன்று விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்வது தெரியவந்தது. பொது மக்கள் புகாரை தொடர்ந்து, உடனடியாக அந்த லாரியை போலீசார் மடக்கி பிடிக்க முற்பட்டனர்.