TF1 தொலைக்காட்சி அலுவலம் - உள்ளே எட்டிப் பார்ப்போமா?
19 ஆனி 2020 வெள்ளி 10:30 | பார்வைகள் : 19187
பிரான்சில் TF1 தொலைக்காட்சியை அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதில் இரவு 8 மணிக்கு வரும் செய்திகள் உலகப் பிரபலம். நாட்டின் பெரும் தலைவர்கள் தொடக்கம் சாதாரண மக்கள்வரை தவறாமல் இந்த 8 மணிச்செய்தியை பார்ப்பார்கள்.
சரி, இந்த தொலைக்காட்சியின் அலுவலகத்தை ஒருமுறை சுற்றி வருவோமா?
60 மீட்டர் உயரமான உருளை வடிவ கட்டிடம். பென்னம் பெரிய எரிவாயு சிலிண்டர் ஒன்றை நிமிர்த்தி வைத்தது போன உருவம். பரிசின் எல்லைப் புறத்தில் இருக்கும் Boulogne-Billancourt நகரிலே, சென் நதிக்கரை ஓரமாக, உயர்ந்து நிற்கிறது இந்த பள பள கட்டிடம்.
அந்தப் பள பளப்புக்கு காரணம் கண்ணாடிகள். சாதாரண கண்ணாடிகள் அல்ல. பிரதிபலிக்கும் கண்ணாடிகள் அவை. 14 மாடிகளைக் கொண்ட கட்டிடம் அது. 56.9 மில்லியன் யூரோக்கள் செலவில் 1992 இல் இதனைக் கட்டி முடித்தார்கள்.
எதேனும் விசேட ஒளிபரப்பு என்றால், கட்டிடத்தின் வெளியே உள்ள இராட்சத திரையில் காண்பிப்பார்கள். பல கிலோமீட்டர் தூரத்தில் இருந்துகூட உங்களால் அதனைப் பார்க்க முடியும்.
இந்தக் கோபுரத்தின் உச்சியில் உள்ள பெரும் கமெராக்கள் பரிஸ் நகரின் காட்சிகளை நேரடி ஒளிபரப்புச் செய்கின்றன.
இரவு 8 மணிச் செய்தியின் போது பின்னணியில் தெரியும் பரிசின் காட்சிகள் யாவும் இந்தக் கமெராக்கள் மூலம் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படுபவை.
சென் நதியில் உல்லாசப் படகுகளில் வலம்வரும் பயணிகள் இந்தக் கட்டிடத்தைப் படம்பிடிக்கத் தவறுவதில்லை.
தொலைக்காட்சி ஒன்றின் கோபுரத்தை மக்கள் காணத்துடிக்கிறார்கள் என்றால் அது TF1 கோபுரமாகத்தான் இருக்கும்.