பிரான்சில் கல்யாணம் சமையல் சாதம்...!!!
18 ஆனி 2020 வியாழன் 10:30 | பார்வைகள் : 19629
புதினங்கள் பலவகை. ஒவ்வொன்றும் ஒருவகை. இன்றைய புதினம் கொஞ்சம் வித்தியாசமானது. கல்யாணம் பற்றியது. கல்யாணத்தில் என்ன வித்தியாசம் வேண்டிக் கிடக்கு? அது வழக்கமானதுதானே? இது வழக்கமான கல்யாணம் இல்லை. வித்தியாசமானது. எங்களைப் பொறுத்தவரை வில்லங்கமானது.
ஆம் ‘ஒரே பாலினத்தவரின்’ கல்யாணம் பற்றிய புதினங்களைத் தான் இன்று பார்க்கப் போகிறோம். ஆண் ஆணையும் பெண் பெண்ணையும் சட்டப்படி திருமணம் செய்யலாம் என்று அரசாங்கம் அறிவித்ததில் இருந்து புதினம் சூடு பிடிக்கிறது.
நாட்டில் எவ்வளவோ வேலைகள் இருக்க, இதுக்குப் போய் ஏன் அரசாங்கம் சட்டம் இயற்றி, அதை பாராளுமன்றத்துக் கொண்டு வந்து நிறைவேற்றணும்? அரசுக்கு வேற வேலையே இல்லையா?
இருக்குத்தான். ஆனால் கொடுத்த குடைச்சல் அப்படி. ‘நாங்கள் சட்டப்படி கட்ட அனுமதி கொடு, அனுமதி கொடு. எங்களை வாழவிடு, அடைந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி’ என்று ஒரே பாலினத்தவர்கள் தெருக்கள் தோறும் போராட்டத்தில் குதிக்க, ஜன்னலுக்குள்ளால் எட்டிப் பார்த்த அரசு பேசாமல் இருந்துவிட்டது.
விடுவார்களா இவர்கள்? பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் என சகல மீடியாக்களிலும் சென்று ‘ஒரே பாலினத்தவர்கள் திருமணம் செய்வதில் உள்ள பத்து நன்மைகள்’ வகையறாவில் பேச ஆரம்பித்துவிட்டார்கள். மீடியாக்களும் இந்த ஈரை பேனாக்கி, பேனை பெருமாள் ஆக்கிவிட, பிரான்ஸ் முழுவதும் ஒரே அல்லோல கல்லோலம்.
அரசாங்கம் நாடியில் கை வைத்தது. ‘பேசாமல் ஆண் பெண்ணையும், பெண் ஆணையும் திருமணம் செய்யுங்களேன். எதுக்கு வம்பு?’ என்று சொல்லிப் பார்த்தது.
‘அதெல்லாம் முடியவே முடியாது. ஆண்கள் ஆண்களையும், பெண்கள் பெண்களையும் தான் திருமணம் செய்வோம். எமக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது’ என்று அவர்கள் விடாப்பிடியாக நின்றனர்.
வேறு வழி என்ன? 2013ம் ஆண்டு மே 18 இல் இந்த திருமணச் சட்டத்த அரசு நிறைவேற்றியது. அன்றில் இருந்து பிரான்சில் ஒரே கல்யாணம் கச்சேரிதான்.
சட்டம் நிறைவேறி 11 நாட்களில் Montpellier நகரில் முதலாவது திருமணம் நடந்தது. அந்த ஆண்டில்
மட்டும் 7000 ஜோடிகள் மாலை மாற்றின.
பின்னர் 2014 இல் 10,000 ஜோடிகள்,
2015 இல் 7751 ஜோடிகள்,
2016 இல் 7114 ஜோடிகள்
என்று ஒரே பாலினத்தவர்களின் திருமண எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்தப் புதினத்தில் முக்கியமான புதினம் என்னவென்றால் இப்படி திருமணம் செய்த யாருமே இதுவரை விவாகரத்து எடுக்கவில்லையாம்.