Paristamil Navigation Paristamil advert login

ஒரு பாலம், அதன் நீளம், அது கட்டப்பட்ட காலம்..!!!

ஒரு பாலம், அதன் நீளம், அது கட்டப்பட்ட காலம்..!!!

14 ஆனி 2020 ஞாயிறு 13:30 | பார்வைகள் : 19298


பிரான்சின் தென்மேற்குப் பகுதியில் Cantal என்று ஒரு மாவட்டம். அங்கு எந்தப் பக்கம் திரும்பினாலும் மலைகள் தான். காண்போர் மனதை, பறித்து இழுக்கும் அந்தக் குறிஞ்சி நிலம். அந்த மாவட்டத்தைக் குறுக்கறுத்துப் பாய்கிறது Truyère எனும் 167 கிலோமீட்டர் நீளமான ஆறு. 
 
சரி அதுக்கு என்ன இப்போ? என்று சலிக்காதீர்கள். 
 
கொஞ்சம் காது கொடுத்தீர்கள் என்றால், ஒரு கதை சொல்லுவோம். 
 
ரயில் போக்குவரத்துக்கள் துரிதகதியில் வளர்ச்சியடைந்த 1850ம் ஆண்டின் பின்னரான காலப்பகுதி அது. பிரான்ஸ் முழுவதும் ரயில்வே தண்டவாளங்கள், ரயில் நிலையங்கள், ரயில்வே பாலங்கள் என  அடுத்தடுத்துக் கட்டப்பட்டுக்கொண்டு இருந்தன. 
 
இப்போது மேலே சொன்னோமே அந்த ஆறு. அதன்மீதும் ஒரு பாலம் கட்டவேண்டிய தேவை வந்துவிட்டது. ஆற்றின் இரு கரையிலும் மலைகள்தான் இருந்தன. அப்படியானால் இரண்டு மலைகளைத் தொடுத்துத்தான் பாலம் கட்ட வேண்டும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் கிட்டத்தட்ட 550 மீட்டர் நீள பாலம் கட்ட வேண்டும். 
 
அவ்வளவு நீளத்தில் பாலம் கட்டுவது சிக்கல் இல்லை. ஆனால் ஆற்றில் இருந்து 124 மீட்டர் உயரத்தில் ( 407 அடிகள் ) கட்டினால் தான் சரியாக இருக்கும் என்று அதிகாரிகள் அரசாங்கத்திடம் சொன்னார்கள். 
 
கற்பனை செய்து பாருங்கள். தரையில் இருந்து 124 மீட்டர் உயரத்தில் ஒரு பாலம். அந்தப் பாலத்தில் ஒரு ரயில் போகிறது என்றால், அந்தப் பாலத்தின் கீழே நம்பி உங்களால் நிற்கமுடியுமா? அல்லது அந்த உயரத்தில் செல்லும் ரயிலின் ஜன்னலோரத்தில் இருந்து உங்களால் வெளியே எட்டிப் பார்க்கத்தான் முடியுமா? 
 
பாலத்தைக் கட்டுபவர்கள், அசதியில் கொஞ்சம் கண் அயர்ந்து தூக்கிவிட்டால் அதோ கதிதான். இப்போது அரசாங்கத்துக்கு தலைவலி. யாரை வைத்துப் பாலம் கட்டுவது? ‘உங்களில் யார் அடுத்த பாலம் கட்டுநர்?’ போட்டி வைக்கலாமா? என்று சிந்திக்காத குறை. 
 
கடைசியில் எங்கோ தேடித் திரிந்து ஒரு ஆளைப் பிடித்து வந்தார்கள் அதிகாரிகள். ‘ஆளைப் பார்த்தால் பாலம் கட்டுபவர் போலத் தெரியவில்லையே’ என்று அரசாங்கம் யோசித்தது. இவரை நம்பி 124 மீட்டர் உயரத்தில் பாலம் கட்ட அனுமதி கொடுத்தால், பத்திரிகைகளில்
நார் நாராகக் கிழித்து தொங்கவிடுவார்களே என்று அரசு பயந்தது. 
 
ஆனால் பார்ப்பதற்கு ‘மாணிக்கம்’ போல இருந்த அந்த மனுஷன் பின்னாளில் பிரான்சின் ‘பாட்ஷா’வாக மாறுவார் என்று அப்போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. 
 
அந்தக் சுவாரசியமான கதை - நாளை.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்