பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதே நோக்கம்: ஜெய்சங்கர்

29 புரட்டாசி 2024 ஞாயிறு 02:58 | பார்வைகள் : 4943
ஐ.நா.,வின் 79வது பொதுச்சபை கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்து வருகிறது. நேற்று நடந்த விவாத கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:
அமைதியும், வளர்ச்சியும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை ஐ.நா., எப்போதும் கடைபிடித்து வருகிறது. தற்போது உக்ரைன், காசா போன்ற இடங்களில் போர் நடக்கிறது. இவை நடந்து தான் ஆகும் என உலகம் விட்டுவிட கூடாது. போர் நடக்கும் போது சர்வதேச சமூகம் உடனடி தீர்வுகளை தேடுகிறது. அந்த உணர்வுகளுக்கு மதிப்பு தந்து, அதற்கேற்ப செயல்பட வேண்டும்.
உலகில் பல நாடுகள் தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளால் பின்தங்கியுள்ளன. ஆனால் சில நாடுகள் தெரிந்தே பேரழிவை தேர்வு செய்கின்றன. அதற்கு சிறந்த உதாரணம் எங்களின் அண்டை நாடான பாகிஸ்தான். அவர்களின் உள்நாட்டு உற்பத்தியையும், ஏற்றுமதியையும் பயங்கரவாதத்தை பொறுத்தே அளவிட முடிம்.
மற்ற நாட்டுக்கு தீமை நடக்க வேண்டும் என நினைத்தவர்கள், அதே தீமை தங்கள் நாட்டை விழுங்குவதை பார்க்கின்றனர். இது தான் கர்மா. மற்ற நாட்டின் நிலத்துக்கு ஆசைப்படும் இந்த செயலற்ற நாடு குறித்து உலக நாடுகள் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த சமயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை நான் தெளிவாகக் கூறுகிறேன்.
பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாத கொள்கை ஒருபோதும் வெற்றி பெறாது. அவர்களின் செயல்களுக்கு நிச்சயம் விளைவுகளை சந்திப்பர். பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பகுதியை விடுவிப்பது மட்டுமே இப்போது எங்களுக்கு இடையே தீர்க்கப்பட வேண்டிய பிரச்னை.
இவ்வாறு அவர் பேசினார்.