Paristamil Navigation Paristamil advert login

துணை முதல்வராகும் உதயநிதி! தமிழக அமைச்சரவையில் திடீர் மாற்றம்

துணை முதல்வராகும் உதயநிதி! தமிழக அமைச்சரவையில் திடீர் மாற்றம்

29 புரட்டாசி 2024 ஞாயிறு 03:00 | பார்வைகள் : 135


தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று அமைச்சரவையில் மாற்றம் செய்ய கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வந்தன. முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவுக்கு செல்வதற்கு முன்பாக அமைச்சரவையில் மாற்றம் நிகழும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல்வர் ஸ்டாலினோ, வலுத்திருக்கிறது, பழுக்கவில்லை என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்வதற்கான பரிந்துரையை தமிழக அரசு, கவர்னர் ரவிக்கு அனுப்பியிருந்தது. இந்த நிலையில், அந்தக் கோரிக்கையை கவர்னர் ஏற்றுக் கொண்டார்.

இதன்மூலம், அமைச்சர் உதயநிதி துணை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். அதேபோல, அமைச்சர்கள், மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும், புதிய அமைச்சர்களாக, செந்தில் பாலாஜி, நாசர் மற்றும் செழியன், ராஜேந்திரன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.


அதேபோல, உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, வனத்துறை அமைச்சராகவும், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் துறை அமைச்சர் மெய்யநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும், ஆதிதிராவிடர் நலத்துறை கயல்விழி செல்வராஜ், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும், வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பால்வளத்துறை அமைச்சராகவும், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, நிதி, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் துறை அமைச்சராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

அமைச்சரவையில் புதிதாக இடம்பிடித்தவர்கள் நாளை பிற்பகல் 3:30 மணிக்கு பதவியேற்க இருப்பதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

அரசு கொறடாவாக ராமச்சந்திரன் நியமனம்

தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட ராமச்சந்திரன், அரசு கொறடாவாக நியமித்து உத்தரவு பிறப்பிப்பு 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்