ரெக்கை கட்டிப் பறந்த அந்தக் காலத்து அண்ணாமலை!!
12 ஆனி 2020 வெள்ளி 12:30 | பார்வைகள் : 19374
ரஜினியின் அண்ணாமலை படத்தில் ஒரு பாட்டுவரும். ‘ரெக்கை கட்டிப் பறக்குதையா அண்ணாமலை சைக்கிள்’ என்று. பாடல் காட்சியில் ரஜினியின் சைக்கிளில் ரெக்கை இருக்காது. அது வானத்தில் பறக்கவும் இல்லை.
ஆனால் வரலாற்றில், ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு பிரெஞ்சுக்காரர் சைக்கிளில் ரெக்கை கட்டிப் பறக்க முயற்சி செய்தார். அவர் வானத்தில் பறந்தாரா? இல்லையா?
தொடர்ந்து வாசியுங்கள்.
1902ம் ஆண்டு தொடக்கம் 1924ம் ஆண்டுவரையான 22 ஆண்டுகள்..!!! பிரான்சிலும் சரி, அயல்நாடுகளிலும் சரி எங்கு சைக்கிள் ஓட்டப் போட்டி நடந்தாலும் அதில் யாரும் ஆர்வத்தோடு கலந்து கொள்வதில்லையாம். ‘எதுக்கு வீணா சைக்கிள் ஓடி எனர்ஜியை வீணாக்கணும்? பேசாம அந்தாளுக்கே கோப்பையைக் கொடுத்துவிடுங்கள்’ என்று சலித்துக்கொள்வார்களாம்.
காரணம் எங்கு போட்டி நடந்தாலும் ‘அந்த ஆள்’ தான் முதலாம் இடத்துக்கு வருவார். பரிசும் அவருக்குத்தான். பாராட்டுப் பத்திரமும் அவருக்குத்தான். வெற்றியாளர் யார் என்பதை தெரிந்துகொண்டு போட்டிகள் நடந்த காலம் அது.
யார் அந்த ‘அந்தாள்?’
அந்தாளின் பெயர் Gabriel Poulain. அவர் பிறந்ததே சைக்கிள் ஓடத்தான். எல்லாப் போட்டிகளிலும் முதலாம் இடம் அவருக்குத்தான். எப்போதாவது அவருக்கு போரடித்தால் இரண்டாம் இடத்துக்கு வருவாராம்.
அந்தாளுக்கு தரையில் சைக்கிள் ஓடி அலுத்திருக்க வேண்டும். அதனால் என்ன செய்தார், தனது சைக்கிளில் இயந்திர இரக்கைகளைப் பொருத்தி, வானத்தில் சைக்கிள் ஓட்ட முயற்சி செய்தார். அவர் நன்றாகத் தான் ஓடினார். என்ன ஒன்று சைக்கிள் நின்ற இடத்தைவிட்டு அசையவே இல்லை.
ஒருமுறை முயற்சி செய்துவிட்டு கைவிடும் ஆள் இல்லை - அந்தாள்.
மீண்டும் மீண்டும் ரெக்கை கட்டினார். பெடலை மிதித்தார். சைக்கிளே உடையும் அளவுக்கு அவரின் வேகம் இருந்தது. ஆனால் ஆகாயத்துக்கும் அவருக்கும் ராசி இல்லைப் போலும். ‘நீ பேசாம தரையிலேயே ஓட்டு சிவாஜி’ என்று அவரின் நண்பர்கள் சொல்லிப் பார்த்தனர்.
அந்தாள் கேட்டால் தானே?
அது ஒருபுறம் இருக்க, 1921ம் ஆண்டு ஜூலை மாதம், பிரான்சின் பிரபல கார் உற்பத்தி நிறுவனம் ஆகிய Peugeot, ஒரு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா நடத்தியது.
அறிவிப்பாளர் ஒலிவாங்கியில் பின்வருமாறு அறிவிக்கிறார்.
‘இதோ நமது Peugeot நிறுவனம் வழங்கும் பத்தாயிரம் பிராங்க் பணப் பரிசினை வெல்ல வருகிறார் உலகின் முதல்முதலாக, தனி ஒரு நபராக வானத்தில் பறந்த பிரபல சைக்கிள் ஓட்ட சாம்பியன் கபிரியல்’
என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்? அந்தாளே தான். ஏதோ தலைகீழாக நிண்டு ஆகாயத்தில் பறந்துவிட்டார். நாம் தான் சொன்னமே அவர் சாதாரண ஆள் இல்லை என்று.
என்ன ஒன்று அவரால் சைக்கிளைக் கொண்டு பறக்க முடியவில்லை. அதனால் தனக்குத் தானே ரெக்கை கட்டி, தரையில் இருந்து ஒரு மீட்டர் உயரத்தில், 10 மீட்டர் தூரம் பறந்து பொத்தென்று கீழே விழுந்தார்.
பறந்தது 10 மீட்டர் என்றாலும் அந்தக் காலத்தில் அது சாதனைதானே?
இப்படி ஓயாது முயற்சி செய்து, உலகில் முதன்முதல் பறந்த தனி ஒருவனாக வரலாற்றில் வாழ்கிறார் கபிரியல்.