Paristamil Navigation Paristamil advert login

எங்கே அந்த இராட்சத மண்டபம்? நேற்றைய தொடர்ச்சி.

எங்கே அந்த இராட்சத மண்டபம்? நேற்றைய தொடர்ச்சி.

10 ஆனி 2020 புதன் 10:30 | பார்வைகள் : 18977


பரிசில் உருவாக்கப்பட்ட 20 ஏக்கர் இராட்சத மண்டபம் பற்றி நேற்றைய பிரெஞ்சுப் புதினத்தில் சொல்லியிருந்தோம் அல்லவா?  
 
தற்போது அந்த மண்டபம் எங்கே? நடந்தது என்ன? வாருங்கள் விசாரிப்போம். 
 
ஒருவாறு 1889ம் ஆண்டு கண்காட்சி முடிந்துபோனது. போட்டிருந்த கடைகள், பந்தல்கள், அலங்காரங்கள் , மாவிலை தோரணங்கள் எல்லாவற்றையும் கழற்றி வைத்துவிட்டு, கூட்டிப் பெருக்கி பரிசை சுத்தப்படுத்தியது அரசு. 
 
இப்போது மிஞ்சிப் போய் இருப்பது ஈபிள் கோபுரமும் அந்த இராட்சத மண்டபமும் தான். இந்த 20 ஏக்கர் மண்டபத்தை வைத்து என்ன செய்யலாம்? 
 
அரசு யோசித்தது. 
 
1900ம் ஆண்டில் அடுத்த கண்காட்சி வந்தது. அது பிரெஞ்சு விவசாயம் மற்றும் உணவு தொடர்பான ஒரு கண்காட்சி. மீண்டும் மண்டபத்தை கழுவித் துடைத்து அலங்கரித்தார்கள். ஒரு பென்னாம் பெரிய கப்பலை இழுத்துக் கொண்டு வந்து நடுவே நிறுத்தினார்கள். அதையும் காட்சிக்கு வைத்தார்கள். மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கடைசியில் அந்தக் கண்காட்சியும் முடிந்து போனது. 
 
அரசு மீண்டு யோசித்தது. போருக்குப் பயன்படுத்தப்படும் யானைகளை கலியாணவீட்டுக்கு வாடகைக்கு விட்ட கதைபோல இந்த இராட்சத மண்டபத்தை அமெரிக்க சர்க்கஸ் கம்பெனி ஒன்றுக்கு வாடகைக்கு விட்டது அரசு. Ringling Bros and Barnum & Bailey Circus எனும் அந்த கம்பெனி இங்கு வந்து கடைவிரித்து நல்ல காசு பார்த்தது. 
 
1902ம் ஆண்டு. இந்த மண்டபத்தில் உள்ளக சைக்கிளோட்டப் போட்டிகளை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. உடனே அதற்குரிய ஓடுபாதைகளை மரப்பலகைகளைக் கொண்டு அமைத்து முடித்தார்கள். போட்டிகள் வெகு சிறப்பாக நடந்தேறின. 
 
போட்டிகள் எல்லாம் முடிந்ததும் எல்லோரும் மூட்டை முடிச்சுக்களைக் கட்டிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள். மண்டபம் அநாதையாக் கிடந்தது. 
 
சாதாரண சிறிய மண்டபமாக இருந்தால் பரவாயில்லை. அதை வைத்து ஏதும் செய்யலாம். ஆனால் இருபது ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட இந்த மகா மண்டபத்தை வைத்து என்னதான் செய்வது? 
 
‘கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டோமோ?’ என்று அரசு யோசித்தது. 
 
1904ம் ஆண்டு மே மாதம் 4ம் திகதி. பிரபல நாளிதழாகிய Le Matin ஓர் இராணுவப் போட்டி நடத்தியது. அதில் பிரெஞ்சு இராணுவத்தின் பல்வேறு படைப்பிரிவுகள் இங்குவந்து முகாம்போட்டுத் தங்கி இருந்தன. எங்கும் ஒரே இராணுவ மயம். 
 
அதன் பின்னர் மண்டபம் கேட்பார் இல்லாமல் கிடந்தது. அரசுக்கோ கவலை. இதை வைத்து என்னதான் செய்வது. பேசாமல்..... என்று அரசு ஏதேதோ நினைப்பதற்குள், 1906ம் ஆண்டு மே முதலாம் திகதி பிரான்ஸ் முழுவதும் பெரும் கலவரம் வெடித்தது. 
 
மாபெரும் பொதுவேலை நிறுத்தம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என்று பிரான்சின் தெருக்கள் எல்லாம் கலவரபூமி ஆகின. 
 
பிரெஞ்சுக் காவல்துறையால் கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே பிரெஞ்சு இராணுவத்தை களத்தில் இறக்க வேண்டிய சூழ்நிலை. வந்த இராணுவம் மீண்டும் இந்த மண்டபத்தில்தான் தங்கினார்கள். 
 
4வது Rennes காலாட்படை, 47வது Saint-Malo காலாட்படை, 2வது Granville காலாட்படை மற்றும் பல படைகள் வந்திருந்தார்கள். 
 
அவர்கள் வந்தார்கள், தங்கினார்கள், கலவரத்தை அடக்கினார்கள், சென்றுவிட்டார்கள். 
 
மீண்டும் சும்மா கிடந்தது மண்டபம். 
 
இதனைப் பராமரிப்பது யானையைக் கட்டி தீனி போடுவது போல. எனவே ‘வேறு முடிவு’ தான் எடுக்கப்போகிறோம் என்று அரசு மெல்ல கதை ஒன்றை கசிவிட்டது. 
 
அந்தச் செய்தி ஊடகங்கள் வாயிலாக தீயாய் பரவியது. மக்கள் அதிர்ந்து போனார்கள். கட்டிடக்கலை நிபுணர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் உறைந்து போனார்கள். 
 
எல்லோரும் ஒருமித்த குரலில் ‘வேண்டாம்’ என்று உரத்துச் சொன்னார்கள். 
 
அரசு கேட்கவில்லை. 
 
விஷயம் வாக்கெடுப்புக்கு போனது. செனட் சபை மற்றும் கட்டிடக்கலை அமைச்சு போன்றவை எதிர்த்து வாக்களித்தன. இருந்தாலும் பரிஸ் நகரசபை விடாப்பிடியாக நின்றது. 
 
இதற்குள் உள்ளக சைக்கிள் ஓட்டப்போட்டிக்காக போடப்பட்டிருந்த ஓடுபாதைகளை அகற்றும்படி குறித்த கம்பெனிக்கு அரசு தகவல் அனுப்பியது. அவர்கள் இராவோடு இராவாக எல்லாவற்றையும் பிடிங்கி எடுத்துக்கொண்டு போய் அருங்கில் இருந்த Boulevard de Grenelle வீதியில் பாதை அமைத்தார்கள். 
 
விஷயம் சீரியஸ் ஆனது. மக்கள் தம் எதிர்ப்பை காட்டினார்கள். அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். அவை எதுவுமே அரசின் காதில் விழவில்லை. 
 
இதற்குள் யாருக்கும் சொல்லாமல் மண்டபத்தில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள், கலைப் பொக்கிஷங்கள் எல்லாவற்றையும் வேறு இடங்களுக்கு மாற்றியது அரசு. 
 
ஊடகங்கள் தமது எதிர்ப்பைக் காட்டின. அரசு வெறித்தனமாக இருந்தது. கடைசியில் 1909ம் ஆண்டு அந்த துயரச் சம்பவத்தை அரசு அரங்கேற்றியது. 
 
ஈபிள் கோபுரம் தனித்துப் போனது. 
 
கழற்றப்பட்ட இரும்புத் தூண்கள், பெரும் கண்ணாடிகள், ஆணிகள், நட்டுகள் அனைத்தையும் வேறு தேவைகளுக்குப் பயன்படுதியது அரசு. அந்த 20 ஏக்கர் நிலப்பகுதி வெட்ட வெளியாகி, மயானபூமி போல காட்சியளித்தது. 
 
பரிஸ் மக்கள், உலக கட்டிடக்கலை நிபுணர்கள் என எல்லோரது கண்களும் குளமாகின. 
 
யாராலும் எதுவுமே செய்யமுடியவில்லை. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. 
 
வரலாறு என்பது ஈவிரக்கம் அற்றது. 
 
இன்று Musée d'Orsay நூதன சாலையில் அந்த இராட்சத மண்டபத்தை 200 மடங்கு சிறிய உருவத்தில் செய்து காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். 
 
அதுமட்டுமே மிஞ்சி உள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்