ஈபிள் கோபுரத்தின் அண்ணன்..!!!
8 ஆனி 2020 திங்கள் 10:30 | பார்வைகள் : 20154
ஈபிள் கோபுரத்தின் அண்ணனா? யார் அது? அவரின் பெயர் என்ன? அவர் எங்கே இருக்கிறார்?
வாருங்கள் பார்க்கலாம். முதலில் எதற்காக ஈபிள் கோபுரம் கட்டப்பட்டது என்பது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். இங்கு பிரெஞ்சுப் புதினம் பகுதியிலும் அதுகுறித்து நாம் முன்னரே சொல்லியுள்ளோம்.
ஆம் 1889 ம் ஆண்டு பரிசில் நடந்த வர்த்தக் கண்காட்சியை சிறப்பிப்பதற்காகவே ‘அயன் லேடி’ எனப்படும் ஈபிள் கோபுரம் உருவாக்கப்பட்டது.
அதேபோல 1939ம் ஆண்டு நடந்த கண்காட்சியை ( நேற்றைய புதினத்தில் விரிவாகச் சொல்லியுள்ளோம் ) சிறப்பிப்பதற்காக ஒரு கோபுரம் கட்டுவது என்று முடிவானது.
அதுவரை பரிசில் உயரமான ஒரு கோபுரம் என்றால் அது ஈபிள்தான். ஆனால் இப்போது உருவாக உள்ள கோபுரம் அதையும் தாண்டி உயரமானது. ஈபிளின் உயரம் 300 மீட்டர். ஆனால் இந்த புதிய கோபுரத்தின் உயரம் 701 மீட்டர். அண்ணாந்து பார்த்தால் கண்டிப்பாக கழுத்து வலிக்கும்.
ஈபிள் கோபுரத்தைவிட உயரம் என்பதால், இதனை அண்ணன் என்று தலைப்பிட்டோம்.
2.5 மில்லியன் டொலர் பணம் ஒதுக்கப்பட்டு, இடமும் தேர்வு செய்யப்பட்டு, ஏனைய சகல ஏற்பாடுகளும் செய்தாகிவிட்டது. Eugène Freyssinet எனும் கட்டிடக் கலைஞரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
அவர் இரவு பகலாக தீயாய் வேலை செய்து, திட்டம் தீட்டி ஒரு கோபுரத்தை வடிவமைத்து அரசிடம் காட்டினார். அரசாங்கம் மயங்கி விழாத குறை.
‘அதாவது 701 மீட்டர் உயர கோபுரம். கொங்கிறீட்டினால் கட்டப்படும். கோபுரத்தில் உச்சியில் பெரிய உணவகம் ஒன்று அமைக்கப்படும்’ என்றார் Eugène Freyssinet.
‘அதுசரி கோபுரத்தின் உச்சிக்கு எப்படிப் போவது?’ என்று அரசாங்கம் கேட்க ‘காரில் தான்’ என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார் அந்த 58 வயது கட்டிடக் கலைஞர்.
இப்போது நீங்களே மயங்கிவிழும் கட்டம். இல்லையா?
அவரின் திட்டப்படி கோபுரத்தில் வெளிப்பக்கம் சுற்றிச் சுற்றிச் செல்லும்
பாதை அமைக்கப்படும். அதில் காரில் ஏறி நீங்கள் பயணிக்கலாம். மேலே போனதும் அங்கே 500 கார்களை நிறுத்திவைக்கும் பார்க்கிங் இருக்கும். அதில் உங்கள் காரை நிறுத்திவிட்டு, உணவகத்தில் சாப்பிடலாம்.
திட்டமெல்லாம் ‘டெரராத்தான்’ இருக்கு. ஆனால் இதை வெற்றிகரமாக் கட்டிமுடிக்கலாமா? என்று அரசு யோசித்தது. இதற்கு அனுமதி கொடுக்கலாமா? வேண்டாமா? என்று அரசு முடியைப் பிய்க்கும்
போது,
“இந்தக் கோபுரத்துக்கு ‘உலகத்தின் கலங்கரை விளக்கு’ என்று பெயர் வைக்கலாம் ( பிரெஞ்சில் Phare du Monde ) என்று அடுத்த ஐடியாவை உதிர்த்தார் Eugène Freyssinet.
எல்லாமே நன்கு திட்டமிடப்பட்டது. ஈபிள் கோபுரத்துக்கு ஒரு அண்ணன் வரப்போகிறார் என்று ஊரெல்லாம் ஒரே பேச்சு. அரசாங்கத்தின் முடிவுக்கு பிரெஞ்சு தேசமே காத்திருந்தது.
என்றாலும் கடைசி நேரத்தில் அரசாங்கம் கையைவிரித்துவிட்டது. ‘அனுமதியும் கிடையாது ஒன்றும் கிடையாது. உதைப்பதற்குள் ஓடிவிடு’ பாணியில் அரசு சொல்லிவிட்டது.
அதனால் ‘உலகத்தின் கலங்கரை விளக்கில்’ இருந்து கடைசிவரை ஒளி வராமலேயே போய்விட்டது. பாருங்கள், வாசிக்கும் உங்களுக்கே இப்படி துக்கமாக இருந்தால், இதனை வடிவமைத்த Eugène Freyssinet க்கு எப்படி இருந்திருக்கும்?
இருந்தாலும் அந்தாள் சாதாரண ஆள் கிடையாது. 1968 ஜூன் 8 ம் திகதி ( அதாவது இன்றைய நாள் ) அவர் இறப்பதற்கு முன்னர் வேறு சில சாதனைகளைச் செய்துவிட்டுத்தான் போனார்.
அவையெல்லாம் என்ன? சொல்லுவோம். காத்திருங்கள்.