பரிசின் பூந்தோட்ட காவல்காரன்..!!
6 ஆனி 2020 சனி 12:30 | பார்வைகள் : 20116
நேற்றைய பதிவின் தொடர்ச்சி..
மன்னனின் கட்டளையை ஏற்ற Jean-Pierre Barillet-Deschamps முதல்கட்டமாக பரிசில் மிகப் பெரும் பூங்காக்களை அமைப்பதற்கான திட்டங்களை வரைபடமாக வரைந்தார். எவ்வளவு ஆட்கள் வேண்டும்? எத்தனை இலட்சம் மரங்கள் நட வேண்டும்? என்றெல்லாம் திட்டம் வகுத்தார். அத்தனைக்கும் ‘ஆமாம்’ சொல்ல அரசன் இருந்ததால், பரிஸ் நகரை பச்சை நிறமாக மாற்றும் பணி கடுகதியில் நடந்தேறியது.
சாலைகளின் இரு மருங்கிலும் மரங்கள் முளைத்தன. காடுமேடாக இருந்த வெட்டவெளிகள் அழகிய பூங்காக்களாக உருமாறின. பூங்காக்களின் நடுவே தடாகங்கள், தடாகத்தின் உள்ளே பறவைகள், உலகில் உள்ள அரிய வகை பூக்கள் மற்றும் அழகிய மரங்கள் என்று பார்த்துப் பார்த்து செதுக்கினார் Jean-Pierre Barillet-Deschamps.
அவரின் அதிரடி ஆட்டத்தில் உருவான பூங்காக்கள் தான் இன்று பரிஸ்நகைரை அவ்வளவு அழகாக வைத்திருக்கின்றன. Bois de Boulogne, Bois de Vincennes, Luxembourg Garden, Parc Monceau, Parc des Buttes Chaumont, Parc Montsouris என்று பரிசின் மூலை முடுக்கெல்லாம் பூங்காவாக்கினார் தேஷோம்ப்.
மன்னனும் மக்களும் மகிழ்ந்தனர். தேஷோம்பின் புகழ் உலகம் எங்கும் பரவிற்று. பல்வேறு நாடுகள் அவருக்கு அழைப்பு விடுத்தன. Belgique, Turkey, Austria, Egypt பல நாடுகளுக்குச் சென்று அங்கும் பூங்காக்கள், பூந்தோட்டங்கள் என்று கொடி நாட்டிவிட்டு வந்தார் தேஷோம்ப்.
இப்படி இயற்கை அழகில் மக்களை மூழ்க வைத்த Jean-Pierre Barillet-Deschamps எனும் இந்த பூந்தோட்டகாவல்காரன், 1873 செப்டெம்பர் 12ம் திகதி இயற்கையோடு இயற்கையாகக் கலந்தார்.
என்றாலும் அன்று அவர் நட்ட மரங்களும் பூங்காக்களும் இன்றும் நிலைத்து நிற்கின்றன.