Carte Vitale இல் உள்ள இலக்கங்களும் அவற்றின் அர்த்தங்களும்.. ( பகுதி 1)

2 ஆனி 2020 செவ்வாய் 11:30 | பார்வைகள் : 21353
பிரான்சில் வசிக்கும் எல்லோருக்கும் தேசிய அடையாள அட்டையைப் போல முக்கியத்துவம்மிக்க இன்னொரு அட்டை என்றால் அது Carte Vitale தான்.
இந்த அட்டையில் 15 இலக்கங்கள் இருக்கும் அல்லவா? அவற்றின் அர்த்தம் உங்களுக்குத் தெரியுமா?
முதலாவது இலக்கம் - நீங்கள் ஆணா? பெண்ணா? என்பதை சுட்டிக்காட்டும். அதாவது முதலாவது இடத்தில் 1 இருந்தால் ஆண் என்றும், 2 இருந்தால் பெண் என்றும் அர்த்தமாகும்.
அடுத்துவரும் இரண்டு இலக்கங்களும் நீங்கள் பிறந்த ஆண்டைக் குறிக்கும். அடுத்துள்ள 4 வது மற்றும் 5 வது இலக்கங்கள் - நீங்கள் பிறந்த மாதத்தைக் குறிக்கும்.
அடுத்துள்ள இரண்டு இலக்கங்கள் நீங்கள் பிறந்த மாவட்டத்தின் இலக்கங்கள் ஆகும். பிரான்சில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒவ்வொரு இலக்கம் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். உதாரணமாக ஒருவர் Paris மாவட்டத்தில் பிறந்திருந்தால், அவரது Carte Vitale இன் 6வது மற்றும் 7 வது இலக்கங்கள் 75 என்று இருக்கும். ( நீங்கள் பிரான்சில் பிறக்காமல் வெளிநாட்டில் பிறந்திருந்தால் 99 என்று இருக்கும் ).
அடுத்துவரும் 3 இலக்கங்கள் ( அதாவது 8வது, 9வது மற்றும் 10வது இலக்கங்கள் ) நீங்கள் பிறந்த நகரைக் குறிக்கும் ( Commune ).
உதாரணமாக ஒருவர் பரிஸ் நகரின் 20 ம் வட்டாரத்தில் பிறந்திருந்தால் 020 என்று இருக்கும்.
இனி 11,12,13 வது இலக்கங்கள் எதனைக் குறிக்கும் தெரியுமா? அதாவது நீங்கள் பிறந்த மாதத்தில் உங்கள் கிராமத்தில் நீங்கள் எத்தனையாவது குழந்தையாகப் பிறந்தீர்கள் என்பதைக் குறிக்கும்.
உதாரணமாக 1990 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், பரிசின் 10 ம் வட்டாரத்தில் ஒரு பெண்குழந்தை பிறக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அது அந்த மாதத்தில் பிறந்த 234 வது குழந்தை என்றால், இப்போது அந்தக் குழந்தையின் Carte Vitale இலக்கத்தை நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிட முடியும்.
பெண்குழந்தை (2)
பிறந்த ஆண்டு (90)
ஆகஸ்ட் மாதம் (08)
பிறந்த இடம் : பரிஸ் 10 ம் வட்டாரம் (75010)
எத்தனையாவது குழந்தை : 234
ஆகவே Carte Vitale இலக்கம் :
2 90 08 75 010 234
அதுசரி, இன்னமும் இரண்டு இலக்கங்கள் மீதம் உள்ளனவே. அவற்றின் அர்த்தம் என்ன?
அடுத்த பதிவில்.