சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இன்று இலங்கை வருகை
2 ஐப்பசி 2024 புதன் 13:43 | பார்வைகள் : 1678
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் இன்று (2) அரசாங்க அதிகாரிகளை சந்திக்க உள்ளனர்.
புதிய ஜனாதிபதியின் நியமனத்திற்குப் பின்னர் சர்வதேச நாணய நிதியம் தொடர்பான செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் கலந்துரையாடலின் போது பிரதான கவனம் செலுத்தப்படும் என வெகுஜன ஊடக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைக் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை தொடர்பான ஆழமான அல்லது மூலோபாய விடயங்களை இந்தக் கூட்டத்தில் விவாதிக்க முடியாது என அமைச்சர் ஹேரத் தெளிவுபடுத்தியிருந்தார்.
மத்திய வங்கியின் ஆளுநர், நிதியமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர்கள் ஆகியோருடன் மூலோபாய விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல்கள் இம்மாத இறுதியில் நியூயோர்க்கில் இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் விளக்கினார்.
“நாங்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் பற்றி விவாதிக்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை மறுஆய்வு செய்வது அவசியம் என்று ஒருமித்த கருத்து உள்ளது.
ஆனால் இன்று நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடனான விவாதங்கள் ஆழமான அல்லது மூலோபாய தலைப்புகளில் ஆராயப்படாது.
மாறாக, புதிய ஜனாதிபதியின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தின் ஈடுபாட்டை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து பேச்சுக்களில் கவனம் செலுத்தப்படும்.
இந்நிலையில், மூலோபாய விவாதங்கள் பின்னர் நியூயோர்க்கில் நடைபெறும், இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை தொடர்பான பிரச்சினைகள் முழுமையாக ஆராயப்படும்.
கடன் மறுசீரமைப்பு தொடர்பாக கடன் வழங்குநர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக முந்தைய அரசாங்கம் கூறியதாகவும் ஆனால் அவர்கள் அதை முழுமையாக முடிக்கவில்லை என்றும் அமைச்சர் விஜித் ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.