ICC Test Rankings முதலிடம் பிடித்த ஜஸ்பிரித் பும்ரா!
3 ஐப்பசி 2024 வியாழன் 08:55 | பார்வைகள் : 829
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பந்துவீச்சாளராக இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா முன்னேறியுள்ளார்.
இதுவரை நம்பர் ஒன் இடத்தில் இருந்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய பும்ரா முதலிடத்தை பிடித்துள்ளார்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலை புதன்கிழமை வெளியிட்டது. இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் மூத்த பேட்ஸ்மேன் விராட் கோலி ஆகியோரும் தரவரிசையில் முன்னேறியுள்ளனர்.
இந்தியா மற்றும் பங்களாதேஷுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 11 விக்கெட்டுகளை எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பும்ரா 870 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அஸ்வின் 869 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக பும்ரா மாறுவது இது இரண்டாவது முறையாகும்.
முன்னதாக இந்த ஆண்டு பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் முதலிடத்தை பிடித்திருந்தார். அதன்பிறகு, தரவரிசை குறைந்தது.
இதற்கு முன்பு இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் கபில் தேவ் இந்த சாதனையை படைத்திருந்தார். கான்பூர் டெஸ்டில் பும்ரா 7 விக்கெட்டுகளையும், அஸ்வின் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
வங்கதேசத்தின் மெஹ்தி ஹசன் மிராஸ் நான்கு இடங்கள் முன்னேறி 18-வது இடத்தைப் பிடித்துள்ளார். சீனியர் சுழற்பந்து வீச்சாளர் ஷகிப் அல் ஹசன் 28-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்த இளம் பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால், இரண்டு இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
இப்போது அவரது கணக்கில் 792 புள்ளிகள் உள்ளன. அவர் நான்கு இன்னிங்ஸ்களில் 47.25 சராசரியுடன் 189 ஓட்டங்கள் எடுத்தார். மூன்று அரைசதங்கள் அடித்தார்.
டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ஜோ ரூட் முதலிடத்தில் உள்ளார். கேன் வில்லியம்சன் 2-வது இடத்தில் தொடர்கிறார்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். சென்னை டெஸ்டில் கோலி 6 மற்றும் 17 ஓட்டங்கள் எடுத்தார். ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் அவர் இடம்பெறவில்லை.
கான்பூர் டெஸ்டில் மீண்டும் களமிறங்கிய விராட் கோலி 47 மற்றும் 29 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 6 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார்.
ரிஷப் பண்ட் 9வது இடத்தில் உள்ளார். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 'டாப்–10' பட்டியலில் இடம் இழந்தார். தற்போது 15வது இடத்தில் உள்ளார்.