நூறு ஆண்டுகளின் பின்னர் அதிகூடிய மழை.. Grand-Morin ஆறு நிரம்பி வழிந்தது.. (செய்திகளின் தொகுப்பு!)
9 ஐப்பசி 2024 புதன் 23:01 | பார்வைகள் : 3092
நூறு ஆண்டுகளின் பின்னர் பரிசில் ஒரே நாளில் அதிகூடிய மழை கொட்டித்தீர்த்துள்ளது. நேற்று பிரான்சில் வீசிய Kirk புயல் தொடர்பான சில முக்கிய செய்திகளை இங்கு தொகுத்துள்ளோம்.
நேற்று நண்பகல் நாட்டின் 35 மாவட்டங்களுக்கு புயல் காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. Seine-et-Marne மாவட்டத்துக்கு அதிகூடிய ’சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டிருந்தது. பின்னர் இரவு 10 மணிக்கு புதிய எச்சரிக்கை விபரங்களை Meteo France வெளியிட்டது. அதன் படி Alpes-Maritimes, Meuse, Aube, Marne, Ardennes, Aisne, Oise, Val-d'Oise, Yvelines, Essonne, Hauts-de-Seine, Seine-Saint-Denis, Val-de-Marne, Paris ஆகிய மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும், Seine-et-Marne மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. (இன்று அதிகாலை 3 மணி வரையான நிலவரம் மட்டுமே இது)
Grand-Morin ஆற்றில் தண்ணீர் நிரம்பி வழிகிறதாகவும், Seine-et-Marne மாவட்டத்தின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் 10, வியாழக்கிழமை காலை அங்குள்ள பாடசாலைகள் அனைத்தும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு நகரமான Vendee வழியாக பிரான்சுக்குள் நுழைந்த Kirk புயல், நேற்று இரவு 10 மணி அளவில் - கிழக்கு நோக்கி முன்னேறியுள்ளதாக வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது. இருந்தபோதும் மழை தொடரும் எனவும், புயல் பாதிப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
64,000 வீடுகளுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது. Pyrénées-Atlantiques மாவட்டத்தில் அதிகபட்சமாக 35,000 வீடுகளுக்கும், Landes மாவட்டத்தில் 8,000 வீடுகளுக்கும், Ariège, Gers, Rhône, Loire, Ain, Hautes-Pyrénées போன்ற மாவட்டங்களிலும் பல வீடுகளுக்கும் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தலைநகர் பரிசில் நேற்று 65 மி.மீ மழை பதிவானது. இலையுதிர் காலத்தின் ஒரு நாளில் இவ்வாறு மழை பதிவாகிறது 104 ஆண்டுகளின் பின்னர் பதிவாகிறது. முன்னதாக இதே அளவுடைய மழை 1920 ஆம் ஆண்டு பதிவாகியிருந்தது.