LBD துப்பாக்கி என்றால் என்ன..? (அறிவியலும் - ஆபத்துக்களும்)
1 பங்குனி 2020 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 18832
மஞ்சள் மேலங்கி போராளிகள் கலவரத்தில் ஈடுபடும் போதெல்லாம், கடமையே கண் என செயற்படும் காவல்துறையினர் 'LBD' எனும் ஒரு துப்பாக்கியால் கலவரக்காரர்களை நோக்கி சுடுவார்கள்.
கடந்த ஒருவருடகாலமாக இதுபோன்ற செய்திகளை நாம் கேள்விப்பட்டுத்தான் வருகின்றோம். LBD துப்பாக்கி என்றால் என்ன??!
அதாவது உயிருக்கு ஆபத்தில்லாமல் காயமேற்படுத்தும் வகையில், இறப்பர் குண்டுகளால் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளே இவை.
இரட்டை குழல்கள் கொண்ட இத்துப்பாக்கிகளை ஆங்கிலத்தில் Flash-ball என அழைக்கின்றார்கள்.
இந்த துப்பாக்கி முழுக்க முழுக்க பிரான்சில் தயாரிக்கப்பட்டவை ஆகும். பிரான்சின் ஆயுத தயாரிப்பாளர்களான Verney-Carron நிறுவனம் இதனை தயாரித்துள்ளது.
44mm அளவுகொண்ட இறப்பர் குண்டுகள் உடம்பில் துளைத்ததும் தாங்கமுடியாத வலி ஏற்படுகின்றது. அவ்வளவும் தான். நீங்கள் வன்முறையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தால் அந்த எண்ணத்தை 'அடியோடு' கைவிடும் எண்ணத்தை இந்த குண்டுகள் தோற்றுவிக்கும்.
இந்த துப்பாக்கியால் ஆபத்துக்களும் உண்டு. கண்கள் பறிபோதல், கோமா நிலை, மூளை அதிர்ச்சிகள் மற்றும் எலும்பு முறிவுகளும் ஏற்படும்.
உயிர் போகுமா என்றால், நேரடியாக இல்லை. ஆனால் இதய நோய் உள்ளவர்கள் அதிர்ச்சியில் உயிரிழக்க வாய்ப்புண்டு.
பல்வேறு மனித உரிமை சங்கங்கள் இந்த துப்பாக்கு எதிராக கொடி பிடித்துள்ளன. ஈவிரக்கம் இல்லாமல் மனிதர்கள் மேல் வன்முறையை பாய்ச்சுகிறார்கள் என பலதடவைகள் கொடி பிடிக்கின்றார்கள். (ஹ்ம்ம்.. குறைந்தபடா ஆயுதமான கண்ணீர் புகையும் ஆபத்துதான். அப்படியென்றால் என்ன தான் செய்வது?)
இந்த துப்பாக்கிகளை பிரெஞ்சு காவல்துறையினர் பிரதானமாக பயன்படுத்த, சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள Macau மாகாண காவல்துறையினரும் இதனை பயன்படுத்துகின்றனர். போர்த்துக்கல் காவல்துறையினரும் பயன்படுத்துகின்றனர்.
உண்மையான ஆபத்து எங்கே என்றால், இத்துப்பாக்கியால் தலையில் சுடும் போது தான். <<அரசு போராட்டத்துக்கும்/ ஆர்ப்பாட்டத்துக்கும் அனுமதி அளித்துள்ள போது ஏன் வன்முறை மேற்கொள்ள வேண்டும்.. ஏன் வீதிகளில் நிற்கும் மகிழுந்துகளை எரிக்கவேண்டும் என பிரெஞ்சு அரசு கேட்கின்றது...>> பதில் தான் இல்லை எம்மிடம்.