“நாகா மனித மண்டை ஓடு” விற்பனையை கைவிட்ட பிரித்தானிய ஏல நிறுவனம்
10 ஐப்பசி 2024 வியாழன் 10:15 | பார்வைகள் : 850
இந்தியாவில் எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து “நாகா மனித மண்டை ஓடு” மீதான ஏல விற்பனையை பிரித்தானியாவின் ஏல அமைப்பு கைவிட்டுள்ளது.
ஆக்ஸ்போர்டுஷையரின்(Oxfordshire) டெட்ஸ்வொர்த்தில்(Tetsworth) உள்ள ஸ்வான் ஏல அமைப்பு அதன் “தி க்யூரியஸ் கலெக்டர் விற்பனையில்”(The Curious Collector Sale) உலகம் முழுவதிலும் இருந்து பெறப்பட்ட மண்டை ஓடுகளை ஏலத்தில் முன்வைத்தது.
இந்த ஏலத்தின் 64வது இடத்தில் இந்தியாவின் 19ம் நூற்றாண்டை சேர்ந்த “நாகா மனித மண்டை ஓடு” (Naga Human Skull) ஏல விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன் ஏல தொடக்க விலை சுமார் GBP 2,100 (தோராயமாக ரூ. 2.30 லட்சம்) நிர்ணயிக்கப்பட்டது. அத்துடன் இது சுமார் GBP 4,000 வரை விலைக்கு செல்லலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ(Neiphiu Rio) தலைமையில் எதிர்ப்பு குரல் எழுந்ததை தொடர்ந்து, பிரித்தானியாவின் ஏல நிறுவனம் “நாகா மனித மண்டை ஓடு” மீதான ஏல விற்பனையை கைவிட்டுள்ளது.
“நாகா மனித மண்டை ஓடு” மீதான ஏல விற்பனையை தடுக்க கோரி இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் தலையீடுமாறு நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து இது நடந்துள்ளது.
இது இந்திய மக்களின் உணர்ச்சிகரமான மற்றும் புனிதத்துவம் தொடர்பானது என்பதால், பிரித்தானிய ஏல நிறுவனம் இந்த விற்பனையை கைவிட்டுள்ளது.