'PARIS 24' ஒலிம்பிக் வீராங்கனை தீவைத்து எரித்து கொலை. "மிகவும் கொடியது" ஐக்கிய நாடுகள் சபை.
7 புரட்டாசி 2024 சனி 06:58 | பார்வைகள் : 3261
பாரிசில் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட உகண்டா நாட்டைச் சேர்ந்த 33 வயதான உலகப் புகழ்பெற்ற மரதன் ஓட்ட வீராங்கனை Rebecca Cheptegei போட்டிகள் முடிந்து நாடு திரும்பிய நிலையில் உயிருடன் எரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஒரு குழந்தையின் தாயான இவரை அவரின் முன்னாள் கணவனே எரியூட்டி கொலை செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
Rebecca Cheptegei இன் முன்னாள் கணவர் மறைந்திருந்து அவரின் உடல் மீது பெற்றோல் ஊற்றி நனைத்தபின்னர் தீ மூட்டியுள்ளார். உடல் முழுவதும் எரிந்த நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவர் கடந்த வியாழனன்று உயிரிழந்தார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
காவல்துறையினர் மற்றும் மருத்துவமனை அறிக்கைகளின்படி அவரது உடலில் 80 வீதமான பகுதிகள் மிக மோசமாக எரிந்த காரணத்தால் உள்ளுறுப்புகள் செயலிழந்து அவர் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த சோகம் நிறைந்த வீரங்கனையின் மரணத்தை அடுத்து கருத்து தெரிவித்த
பாரிஸ் நகரசபை முதல்வர் Mme Anne Hidalgo "பாரிஸில் உள்ள விளையாட்டு அரங்கம் ஒன்றுக்கு உகண்டா நாட்டின் ஒலிம்பிக் ஓட்ட வீராங்கனை Rebecca Cheptegei பெயர் சூட்டப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந்தப் படுகொலை குறித்து ஐக்கிய நாடுகள் சபை தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது அதில் "மிகவும் கொடியது" என தனது இரங்கல் செய்தி தெரிவித்துள்ளது.