துருக்கி-அமெரிக்க இளம் பெண்இஸ்ரேலிய படைகளால் சுட்டுக் கொலை
7 புரட்டாசி 2024 சனி 09:17 | பார்வைகள் : 2589
வெஸ்ட் பேங்க் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த துருக்கி-அமெரிக்க பெண் இஸ்ரேலிய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலிய படைகளுக்கும், காசாவில் உள்ள ஹமாஸ் படையினருக்கும் இடையே தீவிரமான போர் மோதல் நடைபெற்று வருகின்றது.
இந்த போரின் மற்றொரு புள்ளியான வெஸ்ட் பகுதியில் இஸ்ரேலிய படைகள் கடந்த சில நாட்களாக சோதனை மற்றும் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
கிட்டத்தட்ட 10 நாள் நடவடிக்கைக்கு பிறகு வெஸ்ட் பேங்க் பகுதியில் இருந்து பின்வாங்கிய இஸ்ரேலிய படைகள் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த துருக்கி-அமெரிக்க பெண் ஒருவரை சுட்டுக் கொன்று இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட வெஸ்ட் பேங்க் நகரமான பீட்டாவில்(Beita) இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த துருக்கி-அமெரிக்க பெண் இஸ்ரேலிய படைகளால் தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை சம்பந்தப்பட்ட பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தியதை இஸ்ரேலிய ராணுவமும் ஒப்புக் கொண்டுள்ளது.
இதையடுத்து கொல்லப்பட்ட பெண் அய்செனூர் எஸ்கி(Aysenur Ezgi Eygi) என துருக்கி அடையாளம் கண்டுள்ளது.
அமெரிக்கா இதனை துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்று விவரித்து இருப்பதுடன் இது தொடர்பான விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அதே சமயம் ஐக்கிய நாடுகள் உரிமை அலுவலகம் இந்த கொலைக்கு இஸ்ரேலை நேரடியாக குற்றம் சாட்டியுள்ளது.
26 வயதான Eygi வெஸ்ட் பேங்க்-கில் இஸ்ரேலின் அத்துமீறிய குடியேற்றங்களுக்கு எதிராக அமைதியான முறையில் நடைபெறும் போராட்டங்களில் பங்கேற்று வந்ததாக ஐ.நா தெரிவித்துள்ளது.