பிரெஞ்சு மக்களும் - உணவாக்கப்படும் நத்தைகளும்!
19 ஐப்பசி 2021 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 20909
‘மிஸ்ட்டர் பீன் ஹாலிடே’ என ஒரு ஆங்கில திரைப்படம் உண்டு. மிஸ்ட்டர் பீன் விடுமுறைக்காக பிரான்சுக்கு வருவார். அவர் ஒரு பிரெஞ்சு உணவகத்தில் அமரும் போது அவருக்கு எதை ‘ஓடர்’ செய்வது என தெரியாது. அருகில் ஒரு அம்மா ருசித்து ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் உணவு ஒன்றை காண்பித்து.. அது தான் வேண்டும் என்பார்.
வெயிட்டர் மேசையில் கொண்டு வந்து வைப்பது ‘நத்தை சூப்’!
அது ஒன்றும் காமெடிக்காக வைக்கப்பட்ட காட்சி இல்லை. பிரெஞ்சு மக்களுக்கு நத்தை மீதான காதல் சொல்லில் அடங்காது.
உலகின் எங்கிருந்திருதெல்லாமோ இருந்து பிரான்சுக்கு நத்தைகள் கொண்டுவரப்படுகின்றது.
பிரெஞ்சு நபர் ஒருவர் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 500 நத்தைகளை உணவாக சாப்பிடுகின்றாராம்.
அட இது பறவாயில்லை. ஒரு வருடத்துக்கு 25.000 தொன் நத்தைகள் பிரான்சுக்குள் கொண்டுவரப்படுகின்றன. அவற்றையெல்லாம் தின்று தீர்ப்பது யார் என்கின்றீர்கள்..? எல்லாம் நமது குடியானவர்கள் தான்.
நத்தைகள் தான் உலகில் சுவையான உணவு என பிரெஞ்சு மக்கள் நம்புகின்றனர். அதிலும் பட்டரும் உள்ளியும் சேர்த்து சமைப்பட்ட உணவுக்கு இந்த நெப்போலிய தேசமே அடிமையப்பா..!
அட.. போய் தொலைகிறது விடுங்கள்… இப்போது நாம் சொல்லப்போகும் தகவலை கேட்டு உங்களுக்கு மயக்கம் வந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பில்லை.
பிரெஞ்சு தொடருந்துகளில் உயிருடன் இருக்கும் நத்தை ஒன்றை நீங்கள் எடுத்துச் செல்ல அதற்கு என ஒரு ‘டிக்கெட்’ வேண்டும். 2008 ஆம் ஆண்டில் ஒருவர் நத்தை ஒன்றை தொடருந்தில் டிக்கெட் இல்லாமல் கொண்டு சென்று தண்டப்பணம் கட்டித்தொலைத்தார்.
சட்டம் என்ன சொல்கின்றதென்றால்… 5 கிலோவுக்கு உட்பட்ட விலங்குகளை நீங்கள் தொடருந்தில் கொண்டு செல்ல அதற்கென தனியாக டிக்கெட் எடுக்கவேண்டும் என சொல்கிறது.
உண்மைதான்!