Paristamil Navigation Paristamil advert login

ஒக்டோபர் 17, 1961 - படுகொலைகள்! - அரசு செய்த அட்டூழியம்..!

ஒக்டோபர் 17, 1961 - படுகொலைகள்! - அரசு செய்த அட்டூழியம்..!

18 ஐப்பசி 2021 திங்கள் 11:39 | பார்வைகள் : 20675


“மீண்டும் ஒருமுறை இதுபோன்ற தரவறை அரசு செய்துவிடக்கூடாது” என்பதில் அரசு எப்போதும் கவனமாக உள்ளது. அப்படி ஒரு அட்டூழியத்தை 1961 ஆம் ஆண்டு மேற்கொண்டிருந்தது அரசு.

1954 இல் இருந்து 1962 ஆம் ஆண்டு வரை ‘அல்ஜீரிய யுத்தம்’ இடம்பெற்றிருந்தது. இந்த யுத்தத்தின் நடுவில் ஒக்டோபர் 17 ஆம் திகதி, 1961 ஆம் ஆண்டு, சென் நதியின் இடது பக்க கரையான Pont Saint-Michel பகுதியில் ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது.

மிகவும் அமைதியாக எந்த ஒரு வன்முறைகளும் நிகழாமல் அமையாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் அல்ஜீரிய மக்கள்! இங்கு தான் பிரச்சனை ஆரம்பிக்கின்றது. அல்ஜீரிய யுத்தத்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது, அல்ஜீரிய மக்களால் மேற்கொள்ளப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தை அரசு பொறுத்துக்கொள்வதாக இல்லை.

1956 ஆம் ஆண்டு பரிஸ் நகருக்கு காவல்துறை பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டவர் தான் Maurice Papon. இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற போது அவர்தான் பரிஸ் நகர காவல்துறை தலைமை அதிகாரியாக இருந்தார். அவரது உத்தரவின் பேரில், இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நடுவே காவல்துறையினர் நுழைந்தனர்.

பிரெஞ்சு வரலாறு காணாத மிக மோசமாக ஒரு வன்முறை காட்சி அங்கு அரங்கேறியது. 7000 காவல்துறையினர், 1,400 ஜொந்தாம் மற்றும் கலவரம் அடக்கும் காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.

ஆட்டு மந்தைக்குள் புகுந்த புலிக்கூட்டம் போல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கண்ணாபின்னாவென தாக்க தொடங்கினார்கள். கைகளில் வைத்திருந்த ஆயுதங்களால் ஆர்ப்பாட்டக்குழுவினரை மிக மோசமாக தாக்கினார்கள்.

தலையில் அடிக்கப்பட்டும், துப்பாக்கி முனையில் உள்ள கத்தியால் குத்தி கிழிக்கப்பட்டும் இரத்த பூமியாக மாறியது சென் நதிக்கரை.

மோசமாக தாக்கிவிட்டு அவர்களை தூக்கி சென் நதிக்குள் வீசினார்கள். வாழ்வில் ஒரு பாவமும் அறியாத சென் நதி இந்த கொடூர காட்சியை பார்த்து உள்ளுக்குள் அழுதிருக்கும்.

சென் நதியில் இரத்தம் கலந்து இரத்த ஆறாக மாறியது.

வன்முறை எங்குமே தங்கு தடை இல்லாமல் தொடர்ந்தது. ‘வேண்டுமென்றே கட்டவிழ்த்துவிடப்பட்ட’ இந்த வன்முறையை தடுப்பார் யாரோ..?

30,000 பேர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கற்கள் கூட இருக்கவில்லை காவல்துறையினருக்கு எதிராக வீச.

பலர் அடிவாங்கியே செத்தார்கள்.

அன்றைய பொழுதில் 11.000 பேர் கைது செய்யப்பட்டனர். காவல்நிலையங்களில் வன்முறை தொடர்ந்தது.


********
உங்களுக்கு தெரியுமா..?

இந்த வன்முறை வெறியாட்டம் இடம்பெற்று நேற்றோடு 60 ஆண்டுகள் ஆகின்றன. ஜனாதிபதி மக்ரோன் கூட இந்த நாளில் அஞ்சலி செலுத்தியிருந்தாரே?

சம்பவம் இடம்பெற்று பல ஆண்டுகள் கழிந்தோடி… 1999 ஆம் ஆண்டிலேயே காவல்துறை தலைமையதிகாரியாக இருந்த Maurice Papon இற்கு தண்டனை கிடைத்தது.

1998 ஆம் ஆண்டில் தான் அரசு ‘இந்த வன்முறையில் 40 பேர் கொல்லப்பட்டிருக்கலாம்” அன ஆய்வறிக்கை சமர்ப்பித்தது.

இன்று வரை இந்த வன்முறையில் சாவடைந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை தெரியவில்லை. 300 பேர் வரை காயமடைந்திருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

வன்முறை இடம்பெற்று பல ஆண்டுகளாக சென் நதியில் இருந்து அல்ஜீரிய மக்களின் சடலங்கள் தொடர்ச்சியாக மீட்க்கப்பட்டது.

2007 ஆம் ஆண்டு Maurice Papon சாவடைந்த மறுநாள் பரிசில் உள்ள Gennevilliers தொடருந்து நிலையத்துக்கு “17 Octobre 1961" என ஒரு நாள் பெயர் மாற்றினார்கள்.

**********

இன்று மஞ்சள் மேலங்கி போராட்டம்.. தொடருந்து தொழிலாளர் போராட்டம்.. பந்த், ஸ்ரைக்.. வேலை நிறுத்தம் என என்னன்னவோ ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. காவல்துறைக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் மோதல் வெடிக்கின்றன. ஆனால் வரலாற்றில் மீண்டும் ஒரு “17-ஒக்டோபர் - 1961” வராமல் இருந்தால் சரி!! 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்