ஹெலனா தீவில் நெப்போலியனை காண வந்த இளவரசி ஹராபூ!!
7 ஆனி 2021 திங்கள் 10:30 | பார்வைகள் : 21088
மாவீரன் நெப்போலியன் தனது இறுதிநாட்களில் ஹெலனா தீவில் சிறைவைக்கப்பட்டிருந்தார். அப்போது அவரை காண இளவரசி ஹராபூ வந்திருந்ததாக ஒரு வரலாற்றுத்தகவல் உண்டு. இதன் பின்னால் பல மர்ம முடிச்சுக்கள் உண்டு.
பிரித்தானியாவுக்குச் சொந்தமான தொலைதூர தீவு ஒன்றின் இளவரசியாக ஹராபூ இருந்தார். (இருங்கள்.. அதற்குள் என்ன அவசரம்!?) அவர் ஒருதடவை தனது சொந்த கப்பலில் கடலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, திடீரென பலத்த புயல் காற்று வீசி கப்பல் திசை மாறியது. அப்படி திசைமாறிய கப்பல் St. Helena தீவினை சென்றடைந்து தரை தட்டி நின்றது.
St. Helena தீவில் மாவீரன் நெப்போலியன் சிறைவைக்கப்பட்டிருந்தார். அப்போது இளவரசி ஹராபூ, கப்பலில் இருந்து இறங்கி, குறித்த தீவிற்கு சென்று சில நாட்கள் பொழுதை கழித்தார். அதன்போது அங்கு சிறைவைக்கப்பட்டிருந்த மாவீரன் நெப்போலியனை அவர் சந்தித்தார். இத்தகவலை இளவரசி ஹராபூ ஊடகத்தினரிடம் தெரிவித்தார்.
Bristol Journal இச்செய்தியினை வெளியிட்டது.
ஆனால் உண்மை அதுவல்ல.
இளவரசி ஹராபூவின் கப்பல் ஹெலனா தீவிற்கு சென்றதற்குரிய ஆதாரங்கள் எதுவும் இல்லை. இன்று வரை இல்லை. நெப்போலியனை சந்திக்க வந்தவர்கள் பட்டியலில் இளவரசி ஹராபூவின் பெயர் இல்லை. அட.. விட்டால் ஹராபூ என்று ஒரு இளவரசியே இல்லை என்பீர்கள் போலயே..?
ஆமாம் இல்லை!
இளவரசி ஹராபூ எனும் ஒரு இளவரசில் இந்த உலகிலேயே இல்லை. இவர் ஒரு மோசடிக்கார பெண்மணி. மிக லாவகமாக பொய் சொல்லக்கூடிய ‘பிராடு’ பெண்மணி. 1800 களில் உலகில் உள்ள தீவுகளை அப்போது தான் கண்டுபிடித்துக்கொண்டிருக்கும் போது, இவர் ‘இல்லாத ஒரு தீவுக்கு இளவரசி’ ஆக்கிக்கொண்டு, தனது பெயரை ஹராபூ ஆக்கிக்கொண்டு “பினாத்திக்கொண்டு” திரிந்தார்.
அப்பெண்ணின் பெயர் Mary Baker. பின்னாட்களில் விஷயம் தெரிந்து அவரை பிடித்து சிறையில் அடைத்தது பிரித்தானியா.