ஈஃபிள் கோபுரத்துக்கு மஞ்சள் பெயிண்ட் அடித்தால் என்ன..??
1 ஆனி 2021 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 19420
வணக்கம் நண்பர்களே.. புதிய மாதம்... பல புதிய சுவாரஷ்ய தகவல்களை பிரெஞ்சு புதினமாக தொகுத்து வழங்க நாம் தயாராகிவிட்டோம். இன்றைய பதிவின் தலைப்பை பார்த்து ஒரு நிமிடம் அதிர்ச்சியானீர்களா..?
ஈஃபிள் கோபுரத்துக்கு இதுவரை பல தடவைகள் நிறம் மாற்றியாகிவிட்டது. பொதுவாக ஈஃபிள் கோபுரத்தின் நிறம் “ரெட்டிஷ்-பிரவுன்” அதாவது ’செம்மண்’ நிறம்.
ஈஃபிள் கோபுரம் கட்டிய சில வருடங்களிலேயே ‘ஏண்டா இத கட்டினோம்..?’ என குழப்பங்கள் எழுந்தன. தற்போது உள்ள மாதிரி உலகிலேயே முதல்தர சுற்றுலாத்தலமாக வரும் என என்றெல்லாம் எவரும் எண்ணியிருக்கவில்லை. இதில் ரேடியோ நடத்தி பார்த்தார்கள், ஒருவர் பாராசூட் ஒன்றை பரிசோதித்து பார்த்து உயிரை விட்டார். ஒரு அம்மணி ஈஃபிள் கோபுரத்தை திருமணம் செய்துகொண்டார்... ஒருவரோ விமானத்தை ஈஃபிள் கோபுரத்தின் கால்களுக்கிடையே செலுத்தி சாகசம் செய்தார்.
‘ஏண்டா இப்பிடி பண்ணுறீங்க...?’ என ஈஃபிள் சலித்துக்கொண்டது.
ஒருதடவை எல்லை மீறிப்போய் மஞ்சள் நிற வர்ணத்தை அடித்துவிட்டார்கள். யார் கொடுத்த ‘ஐடியா’ என்றுதான் தெரியவில்லை. முகத்தில் அறைந்தது போன்ற பளீர் மஞ்சள் வர்ணத்தை கொட்டி வர்ணம் அடித்தார்கள்.
’மஞ்சள் நிறம் அடித்தால், கோபுரம் நீண்ட தூரத்துக்கு தெரியும்’ என ஒருவர் கிளப்பிவிட, அந்த நிறமும் அடிக்கப்பட்டது.
நல்லவேளையாக அப்போது இந்த கூத்துக்களை எவரும் கண்டுகொள்ளவில்லை. நினைத்துப்பாருங்கள்.. இப்போது மஞ்சள் நிற பெயிண்ட் அடித்தால் என்னாகும்..??
இப்படியாக பலதலமுறை ஈஃபிள் கோபுரம் சிக்கி சீரழிந்து தான் இப்போது இப்படியாவிட்டது!